search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாண்டியா தொகுதியில் போட்டியிடுவது உறுதி - சுமலதா அறிவிப்பு
    X

    மாண்டியா தொகுதியில் போட்டியிடுவது உறுதி - சுமலதா அறிவிப்பு

    மாண்டியா தொகுதியில் நான் போட்டியிடுவது உறுதி. எனக்கு ஆதரவு கொடுக்கப்போவதாக பா.ஜனதா அறிவித்து இருப்பதாக கூறுவது வதந்தி என்று சுமலதா கூறினார். #ParliamentElection #Sumalatha
    பெங்களூரு:

    சமீபத்தில் காலமான கன்னட நடிகரும், முன்னாள் மத்திய மந்திரியுமான அம்பரீஷ் ஏற்கனவே மாண்டியா தொகுதியில் காங்கிரஸ் எம்.பி.யாக இருந்தார். அந்த தொகுதியில் போட்டியிடப்போவதாக அவரது மனைவியும், நடிகையுமான சுமலதா அறிவித்து உள்ளார்.

    தற்போது எந்த முடிவையும் எடுக்க வேண்டாம் என்றும், இதுகுறித்து பேசி முடிவு செய்து கொள்ளலாம் என்றும் முன்னாள் முதல்- மந்திரி சித்தராமையா மாநில காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ் ஆகியோர் வேண்டுகோள் விடுத்து இருந்தனர்.

    அவர்களது வேண்டுகோளை நிராகரித்த சுமலதா திடீரென்று மாண்டியா தொகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். நடிகர் அம்பரீஷ் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

    பின்னர் அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    மாண்டியா தொகுதியில் நான் போட்டியிடுவது உறுதி. எனக்கு ஆதரவு கொடுக்கப்போவதாக பா.ஜனதா அறிவித்து இருப்பதாக கூறுவது வதந்தி ஆகும். பா.ஜனதா தலைவர்கள் யாரும் என்னை தொடர்பு கொண்டு பேசவில்லை. மாண்டியா மக்கள் என் கணவர் மீது அதிக அன்பு வைத்து இருந்தார்கள். அதே அளவு அன்பை என்னிடம் வைத்து இருக்கிறார்கள். என் கணவரின் ஆசையை நிறைவேற்றவும், அவர் விட்டு சென்ற பணிகளை தொடரவும், மாண்டியா தொகுதியில் போட்டியிட உள்ளேன்.

    காங்கிரஸ் கட்சி சார்பில்தான் போட்டியிடுவேன். இந்த தொகுதி கூட்டணி கட்சிக்கு போனால் என்ன செய்வது என்ற முடிவினால் என்னை பெங்களூரு தெற்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடுமாறு வலியுறுத்தி வருகின்றனர். அந்த தொகுதியில் நிற்க எனக்கு விருப்பமில்லை. எனது கணவரின் ஆதரவாளர்கள் மற்றும் மாண்டியா மக்கள், காங்கிரஸ் பிரமுகர்கள் ஆதரவினால் மாண்டியா தொகுதியில் போட்டியிடுவேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மாண்டியா தொகுதியை காங்கிரசுக்கு விட்டுத்தர மாட்டோம் என்று ஏற்கனவே முதல் மந்திரி குமாரசாமி அறிவித்து உள்ளார். மாண்டியா தொகுதியில் தனது மகனும், நடிகருமான நிகில் கவுடாவை போட்டியிட வைக்க குமாரசாமி திட்டமிட்டு உள்ளார். இதற்காக அந்த தொகுதியை காங்கிரசிடம் இருந்து கேட்டு பெறவும் அவர் முடிவு செய்து உள்ளார். இதனால் மாண்டியா தொகுதி ஜே.டி.எஸ்.சுக்கு ஒதுக்கப்படும் சூழ்நிலை உருவானால் சுமலதா சுயேட்சையாக களம் இறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #ParliamentElection #Sumalatha
    Next Story
    ×