search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்திய எல்லைக்குள் அழைத்து வரப்பட்ட அபிநந்தன்.
    X
    இந்திய எல்லைக்குள் அழைத்து வரப்பட்ட அபிநந்தன்.

    பாகிஸ்தானில் 3 நாட்கள் அபிநந்தனுக்கு நடந்தது என்ன?- ராணுவ அதிகாரிகள் விரைவில் விசாரணை

    பாகிஸ்தானில் 3 நாட்கள் இருந்த இந்திய விமானி அபிநந்தனுக்கு என்ன நடந்தது? என்பது குறித்து ராணுவ அதிகாரிகள் விசாரணை நடத்த உள்ளனர். #Abhinanthan
    புதுடெல்லி:

    பாகிஸ்தான் விமானங்களை துரத்திச் சென்று கடந்த 27-ந்தேதி பாகிஸ்தான் ராணுவத்திடம் பிடிபட்ட அபிநந்தன் நேற்று இரவு 9.20 மணிக்கு விடுவிக்கப்பட்டார்.

    பாகிஸ்தான் ராணுவத்திடம் அபிநந்தன் சிக்கிக் கொண்ட காட்சிகள் பாகிஸ்தான் ஊடகங்கள் மூலமே வெளியானது. பாகிஸ்தான் மக்களிடம் சிக்கிக் கொண்ட அபிநந்தனை பாகிஸ்தான் ராணுவம் மீட்டுச்சென்றதாகவும் தகவல் வெளியானது.

    பாகிஸ்தான் ராணுவ அலுவலகத்தில் அபிநந்தன் கவுரமாக நடத்தப்பட்டதாகவும், அங்குள்ள அதிகாரியிடம் அபிநந்தன் உரையாடும் காட்சிகளும் வெளியானது.

    வழக்கமாக ராணுவ அலுவலக ரகசியங்கள் வெளியாவதில்லை. ஆனால் அபிநந்தன் பாகிஸ்தான் ராணுவ அலுவலகத்தில் அந்நாட்டு அதிகாரியுடன் உரையாடும் காட்சிகள் வெளியானது. ஒரு நிமிடம் 24 நொடிகள் கொண்ட அந்த காட்சியில் அபிநந்தன் பேசுவது பல முறை எடிட் செய்யப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. பாகிஸ்தானின் இந்த நடவடிக்கைக்கு காரணம் என்ன? என்பது பற்றியும் இந்திய அதிகாரிகள் விசாரிக்க உள்ளனர்.

    பாகிஸ்தான் ராணுவத்திடம் பிடிபட்டு 3 நாட்களுக்கு பிறகு அபிநந்தன் நேற்று இந்தியா திரும்பி உள்ளார். அவர், நேற்று வாகா எல்லையில் நுழைந்தபோது பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதனை முகமலர்ச்சியுடன் அபிநந்தன் ஏற்றுக்கொண்டார். என்றாலும் அவரை ஊடகத்தினர் நெருங்க ராணுவ உயர் அதிகாரிகள் அனுமதிக்கவில்லை.

    இந்திய எல்லைக்குள் அபிநந்தன் கால் வைத்ததும், விமானப்படை உயர் அதிகாரி கபூர் அவரை ராணுவ வாகனத்தில் ஏற்றி அழைத்துச் சென்றார்.

    பாகிஸ்தானில் 3 நாட்கள் இருந்த அபிநந்தன் மனதளவில் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்பதால் முதலில் அவருக்கு ராணுவ மருத்துவமனையில் பரிசோதனை நடத்தப்படுகிறது. அதன் பிறகு எதிரி நாட்டுக்குள் அபிநந்தனுக்கு என்னென்ன? நடந்தது என்பது பற்றி விசாரிக்கப்படும்.

    ராணுவத்தின் இன்டெலிஜன்ஸ் பிரிவு அதிகாரிகள் இது தொடர்பான விசாரணையில் ஈடுபடுவார்கள். அப்போது அபிநந்தனுக்கு பாகிஸ்தானில் நடந்தது என்ன? என்பது பற்றிய விவரங்கள் தெரிய வரும்.

    இதுபோல பாகிஸ்தான் முதலில் வெளியிட்ட அறிவிப்பில் 2 இந்திய விமானிகள் பிடிபட்டதாக தெரிவித்தனர். பின்னர் அந்த தகவலை மாற்றி ஒருவர் மட்டுமே சிக்கியதாக கூறினர். இந்த குழப்பத்துக்கு காரணம் என்ன?

    பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட வீடியோ காட்சியில் காணப்பட்ட விமானத்தின் பாகம், அது எந்த பகுதி? என்பது குறித்தெல்லாம் ராணுவத்தின் இன்டெலிஜன்ஸ் பிரிவு அதிகாரிகள் விசாரிக்க உள்ளனர். அதுவரை அபிநந்தனை ஊடகங்கள் சந்திக்க வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது.



    அபிநந்தன் நேற்று பகல் 12 மணிக்குள் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படுவார் என்று பாகிஸ்தான் கூறி இருந்தது. ஆனால் அவர், மிகவும் காலதாமதமாக இரவு 9.20 மணிக்குதான் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டார். இதற்காக வாகா எல்லையில் தினமும் நடைபெறும் கொடி இறக்க நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.

    இந்திய விமானத்தில் அபிநந்தனை அழைத்து வரவும் பாகிஸ்தான் மறுத்து விட்டது. ராணுவத்தின் வழக்கமான நடைமுறைகள், அலுவலக குறிப்பேடுகளில் எழுதுவது உள்பட பல்வேறு காரணங்களால் அபிநந்தன் இந்தியாவுக்கு வருவது தாமதமானதாக கூறப்பட்டது. இதில் எந்த அளவுக்கு உண்மை உள்ளது என்பது பற்றியும், இந்தியா விசாரித்து வருகிறது.

    அபிநந்தனை வாகா எல்லைக்கு அழைத்து வந்த போது, அவருடன் ராணுவ உடையில் உடன் வந்தவர் கேரளாவைச் சேர்ந்த ராணுவ அதிகாரி குரியன் ஆவார்.  #Abhinanthan
    Next Story
    ×