search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெங்களூருவில் விமானப்படை தளத்தில் பயங்கர தீவிபத்து - 300 கார்கள் எரிந்து நாசம்
    X

    பெங்களூருவில் விமானப்படை தளத்தில் பயங்கர தீவிபத்து - 300 கார்கள் எரிந்து நாசம்

    பெங்களூருவில், சர்வதேச விமான கண்காட்சி நடைபெற்று வரும் விமானப்படை தளத்தில் நேற்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் 300 கார்கள் எரிந்து நாசமாயின. கார்களில் இருந்த ஆவணங்களும் சாம்பலானது. #AeroIndia2019 #AeroIndia2019venue #AeroIndiavenue #AeroIndiavenuefire
    பெங்களூரு:

    பெங்களூரு எலகங்கா விமானப்படை தளத்தில் 5 நாட்கள் சர்வதேச விமான கண்காட்சி நடைபெற்று வருகிறது. கடந்த 20-ந் தேதி தொடங்கிய இந்த விமான கண்காட்சி இன்றுடன் (ஞாயிற்றுக்கிழமை) முடிவடைகிறது. 4-வது நாளான நேற்று நடந்த விமான கண்காட்சியில் போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் சாகசத்தில் ஈடுபட்டன.

    நேற்று விடுமுறை நாள் என்பதால் இந்த கண்காட்சியை கண்டுகளிக்க ஏராளமானோர் திரண்டு வந்திருந்தனர். மேலும் இதில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள், முக்கிய பிரமுகர்கள் பலரும் கலந்துகொண்டு விமான சாகசங்களை கண்டு ரசித்தனர்.



    விமான கண்காட்சியை காண சென்ற பொதுமக்கள் தங்களின் வாகனங்களை நிறுத்துவதற்கு தனித்தனியாக விமானப்படை தளத்தில் இடம் ஒதுக்கப்பட்டு இருந்தது. அந்த பகுதிகளில் அவர்கள் தங்களின் கார்களை நிறுத்திவிட்டு விமான கண்காட்சியை பார்த்து ரசித்தபடி இருந்தனர்.

    இந்த நிலையில், நேற்று மதியம் 12 மணியளவில் விமானப்படை தளத்தின் 5-வது நுழைவாயில் அருகே கார்கள் நிறுத்தப்பட்டு இருக்கும் இடத்தில் இருந்து அதிகளவில் கரும்புகை வெளியேறி விண்ணை முட்டியது. இதை அங்கிருந்தவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

    உடனடியாக அவர்கள் அங்கு ஓடிச்சென்று பார்த்தனர். அப்போது, வாகன நிறுத்தும் இடத்தில் இருந்த கார்களில் பயங்கரமாக தீப்பிடித்து எரிந்தன. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் தீயணைப்பு படை வீரர்களுக்கு தகவல் தெரிவித்தனர். மேலும், அவர்கள் காரில் பிடித்த தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.

    இதற்கிடையே, அங்கு தீயணைப்பு வாகனங்களில் விரைந்து வந்த வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் தீயின் தாக்கம் அதிகமாக இருந்ததால் உடனடியாக தீயை கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை. ஏனென்றால், கார் நிறுத்தும் இடத்தில் இருந்த புற்கள் காய்ந்த நிலையில் இருந்ததோடு, காற்றும் அதிகமாக வீசியதால் தீ கொழுந்துவிட்டு எரிந்ததுடன் வேகமாக பரவியது. இதனால் தீயை அணைக்க கூடுதலாக தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டன.

    மொத்தம் 15 தீயணைப்பு வாகனங்கள், கார்களில் பிடித்த தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டன். அப்போது, வீரர்களில் ஒருகுழுவினர் தீயை அணைக்கும் பணியிலும், இன்னொரு குழுவினர் கார்களை அப்புறப்படுத்தும் பணியிலும், தீத்தடுப்பு நடவடிக்கையிலும் ஈடுபட்டனர்.

    இதனால் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. 2 மணிநேரத்துக்கும் மேலாக போராடி வீரர்கள் தீயை முழுவதுமாக அணைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இருப்பினும், அங்கு நிறுத்தப்பட்டு இருந்த 300-க்கும் அதிகமான கார்கள் தீயில் கருகி நாசமாகின. இதில் 270 கார்கள் முற்றிலுமாக எரிந்து எலும்புக்கூடாக காட்சியளித்தன. 30-க்கும் அதிகமான கார்கள் பலத்த சேதம் அடைந்தன. இதன் காரணமாக பல கார்களின் பதிவெண் உள்பட எந்த விவரங்களும் சரியாக தெரியவில்லை.

    இதனால், கார்களின் உரிமையாளர்கள் தங்களின் கார்களை தேடி கண்டுபிடிக்க முடியாமல் பரிதவித்தனர். மேலும், எரிந்து போன கார்களின் உள்ளே கார் தொடர்பான ஆவணங்கள் உள்பட பல்வேறு பொருட்கள் இருந்ததால், அவைகளும் எரிந்து சாம்பலானது. தங்களின் கார்கள் எரிந்து இருப்பதை பார்த்து சில பெண்கள் மற்றும் சிறுவர்-சிறுமிகள் கதறி அழுதது, பார்க்க பரிதாபமாக இருந்தது.

    சம்பவம் பற்றி கேள்விபட்டதும் பெங்களூரு மாநகர போலீஸ் கமிஷனர் சுனில் குமார், கிழக்கு மண்டல கூடுதல் போலீஸ் கமிஷனர் சீமந்த் குமார் சிங், தீயணைப்புத்துறை கூடுதல் டி.ஜி.பி. சுனில் அகர்வால் மற்றும் போலீசார் அங்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினார்கள்.

    இந்த தீவிபத்துக்கான சரியான காரணம் உடனடியாக தெரியவரவில்லை. யாரேனும் சிகரெட் புகைத்து காய்ந்தபுற்களில் எறிந்ததால் தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என்றும், அல்லது ஏதேனும் காரில் டீசல் டேங்க் வெடித்து இந்த பயங்கர விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கிறார்கள். இதனால் தீ விபத்துக்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார், தீயணைப்பு துறை மற்றும் ராணுவத்தினர் விசாரணையை தொடங்கி உள்ளனர். இந்த விசாரணைக்காக தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    இந்த தீவிபத்து குறித்து எலகங்கா போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். 
    Next Story
    ×