search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முதல் மந்திரி பதவி தராவிட்டால் பா.ஜனதா கூட்டணியில் இருந்து விலகுவோம் - சிவசேனா மிரட்டல்
    X

    முதல் மந்திரி பதவி தராவிட்டால் பா.ஜனதா கூட்டணியில் இருந்து விலகுவோம் - சிவசேனா மிரட்டல்

    முதல் மந்திரி பதவியை சுழற்சி முறையில் ஆள வேண்டும் இல்லையென்றால் பா.ஜனதா கூட்டணியில் இருந்து விலகுவோம் என சிவசேனா மிரட்டல் விடுத்துள்ளது. #RamdasKadam #ShivSena #BJP
    மும்பை:

    மராட்டிய மாநிலத்தில் பாரதிய ஜனதா, சிவசேனா கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது.

    என்றாலும் கடந்த சில ஆண்டுகளாக பா.ஜனதாவுக்கும், சிவசேனாவுக்கும் இடையே பல்வேறு வி‌ஷயங்களில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டது. இதனால் பா.ஜனதாவின் திட்டங்களை சிவசேனா கடுமையாக விமர்சித்து வந்தது.

    இந்த நிலையில் வருகிற பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா, சிவசேனா இடையே தேர்தல் உடன்படிக்கை ஏற்பட்டுள்ளது. மொத்தம் உள்ள 48 தொகுதிகளில் பாரதிய ஜனதா 25 இடங்களிலும், சிவசேனா 23 இடங்களிலும் போட்டியிட ஒப்பந்தம் செய்துள்ளன.



    கடந்த திங்கட்கிழமை இதற்கான உடன்படிக்கையில் பா.ஜனதா தேசியத் தலைவர் அமித்ஷாவும், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேயும் கையெழுத்திட்டனர். ஆனால் மறுநாளே இரு கட்சிகளுக்கும் இடையே மீண்டும் மோதல் உருவானது.

    சிவசேனா கட்சித்தலைவர் உத்தவ் தாக்கரே கடந்த செவ்வாய்க்கிழமை இரவு தனது வீட்டில் கட்சி மூத்த நிர்வாகிகளுடன் கலந்துரையாடினார். அப்போது அவர், “கடந்த 25 ஆண்டுகளாக பின்பற்றி வந்த கூட்டணி கொள்கையை நிராகரித்து விட்டேன். இனிவரும் தேர்தல்களில் பா.ஜனதா, சிவசேனா இரு கட்சிகளும் சரிசமான இடத்தில் போட்டியிட வேண்டும். அனைத்துப் பதவிகளையும் இரு கட்சிகளும் சரிசமமாக பிரித்துக் கொள்ள வேண்டும்.

    முதல்-மந்திரி பதவியை இரு கட்சிகளும் தலா 2.5 ஆண்டுகள் வகிக்க வேண்டும் என்றேன். எனது இந்த கோரிக்கை ஏற்கப்பட்ட பிறகே கூட்டணி ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டது” என்றார்.

    சிவசேனாவின் இந்த கருத்தை பா.ஜனதா அமைச்சர் சந்திரகாந்த் பாட்டீல் மறுத்தார். அவர் கூறுகையில், “எந்த கட்சி அதிக இடங்களில் வெற்றி பெறுகிறதோ, அந்த கட்சியைச் சேர்ந்தவர் முதல்- மந்திரி பதவியைப் பெறுவார்” என்றார்.

    இது சிவசேனா தலைவர்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக சிவசேனா அமைச்சர் ராம்தாஸ்காதம் கூறியதாவது:-

    ராம்தாஸ்காதம்

    மராட்டியத்தில் பா.ஜனதாவும், சிவசேனாவும் இரண்டு முக்கிய அம்சங்களை அடிப்படையாகக் கொண்டு தேர்தல் ஒப்பந்தம் செய்துள்ளன. கொங்கன பகுதியில் மேற்கொள்ள உள்ள நனார் சுத்திகரிப்பு திட்டத்தை கைவிட வேண்டும். முதல்- மந்திரி பதவியை இரு கட்சிகளும் தலா 2.5 ஆண்டுகள் என்ற முறையில் சுழற்சி முறையில் ஆள வேண்டும்.

    இந்த இரு திட்டங்களையும் பா.ஜனதா மீறினால் அதன் கூட்டணியில் இருந்து சிவசேனா உடனே விலகும். தேர்தலுக்கு முன்பே நாங்கள் கூட்டணியை முறித்து விடுவோம்.

    இவ்வாறு சிவசேனா மந்திரி ராம்தாஸ் காதம் கூறினார்.

    இதனால் பா.ஜனதா மூத்த தலைவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். #RamdasKadam #ShivSena #BJP
    Next Story
    ×