search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உ.பி.யில் 4 நாள் பயணம்- பிரியங்கா காந்தி வாரணாசி செல்கிறார்
    X

    உ.பி.யில் 4 நாள் பயணம்- பிரியங்கா காந்தி வாரணாசி செல்கிறார்

    உத்தரபிரதேச சுற்றுப் பயணத்தின் போது தனது தேர்தல் பணிக்கு உட்பட்ட வாரணாசி எம்.பி. தொகுதிக்கும் பிரியங்கா காந்தி செல்கிறார். #Congress #PriyankaGandhi
    லக்னோ:

    பிரியங்கா காந்தி காங்கிரஸ் கட்சியில் பொதுச் செயலாளராக சமீபத்தில் நியமிக்கப்பட்டார். அவருக்கு உத்தரபிரதேச மாநிலத்தின் கிழக்கு பகுதி பொறுப்பாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள 41 எம்.பி. தொகுதிகளை இவர் கவனிப்பார்.

    தீவிர அரசியலில் குதித்துள்ள பிரியங்கா காந்தி 4 நாட்கள் உத்தரபிரதேசத்தில் முகாமிட்டு தேர்தல் பிரசாரம் செய்தார். பேரணி மூலம் மக்களை சந்தித்தார். ஜோதிர் ஆதித்யா சிந்தியாவுடன் இணைந்து மாநிலம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை சந்தித்தார்.

    இந்த நிலையில் மீண்டும் உத்தரபிரதேசத்தில் 4 நாட்கள் சுற்றுப் பயணம் செய்ய திட்டமிட்டுள்ளார். வருகிற 28-ந்தேதி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் நடைபெறுகிறது. அதற்கு முன்னதாக அவரது சுற்றுப் பயணம் அமைகிறது.

    உத்தரபிரதேச சுற்றுப் பயணத்தின் போது தனது தேர்தல் பணிக்கு உட்பட்ட வாரணாசி எம்.பி. தொகுதிக்கும் பிரியங்கா காந்தி செல்கிறார். இது பிரதமர் நரேந்திரமோடி போட்டியிட்டு வெற்றி பெற்ற தொகுதியாகும்.

    வாரணாசி செல்லும் பிரியங்கா காந்தி காங்கிரஸ் கட்சி தலைவர்களை சந்திக்கிறார். கடந்த 5 ஆண்டுகளில் வாரணாசி தொகுதியில் மோடி செயல்படுத்திய திட்டங்கள் குறித்து கேட்டறிகிறார். பூத் கமிட்டி உறுப்பினர்களை சந்தித்து ஆலோசனைகள் வழங்க உள்ளார். அங்கு வாகனம் மூலம் பேரணியாக சென்று பொதுமக்களை சந்திக்கிறார்.

    வாரணாசி வருகையின் போது காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் நடந்த பயங்கரவாதிகள் தற்கொலை தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பத்தினரை பிரியங்கா சந்தித்து ஆறுதல் கூறுகிறார். மேலும் குஷிநகரில் வி‌ஷ சாராயம் குடித்து உயிரிழந்தோரின் குடும்பத்தினரையும் சந்திக்கிறார். கும்பமேளாவையொட்டி அலகாபாத்தில் அவர் புனித நீராடுவார் என்றும் காங்கிரஸ் கட்சி தலைவர்கள் தெரிவிக்கின்றனர்.

    பிரியங்கா காந்தி வருகையால் வாரணாசி தொகுதி காங்கிரசார் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். இதன் மூலம் அவர்கள் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபடுவார்கள் என காங்கிரஸ் கட்சியின் மாநில செயலாளர் பிரகாஷ் ஜோஷி தெரிவித்தார். #Congress #PriyankaGandhi
    Next Story
    ×