search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சாரதா ஊழல்: நளினி சிதம்பரத்தை 6 வாரங்களுக்கு கைது செய்ய கூடாது -கொல்கத்தா ஐகோர்ட்
    X

    சாரதா ஊழல்: நளினி சிதம்பரத்தை 6 வாரங்களுக்கு கைது செய்ய கூடாது -கொல்கத்தா ஐகோர்ட்

    மேற்கு வங்காளத்தில் நடைபெற்ற சாரதா நிதி நிறுவன ஊழல் வழக்கில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பத்தின் மனைவி நளினி சிதம்பரத்தை கைது செய்ய கொல்கத்தா ஐகோர்ட் இடைக்கால தடை விதித்துள்ளது. #Saradhascam #NaliniChidambaram #CalcuttaHC #interimprotection
    கொல்கத்தா:

    மேற்கு வங்காளம் மாநில தலைநகரான கொல்கத்தாவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்ட சாரதா நிதி நிறுவனம் பொதுமக்களிடம் இருந்து ரூ.30 ஆயிரம் கோடி ரூபாய் நிதியைப் பெற்று மோசடி செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. 

    இதையடுத்து, அந்த நிறுவனத்தின் தலைவர் சுதிப்தா சென் கைது செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கை சிபிஐ மற்றும் அமலாக்கத் துறையினர் தனித்தனியே விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ரூ. 42 கோடி செலவில் தொலைக்காட்சி சேனல் வாங்கும் விவகாரத்தில் சாரதா குழுமத்துக்கு சட்ட உதவிகள் வழங்கியதற்காக நளினி சிதம்பரத்துக்கு சுமார் ஒரு கோடியே 30 லட்சம் ரூபாய் கட்டணம் வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக ஏற்கனவே பொருளாதார அமலாக்கத் துறையும், சிபிஐ-யும் நளினி சிதம்பரத்திடம் விசாரணை நடத்தின.

    முன்னாள் மத்திய மந்திரி மட்டாங் சின்ஹ் மனைவியான மனோரஞ்சனா சின்ஹ் என்பவருக்கு சட்ட ஆலோசகராக பணியாற்றியதற்காகவே மேற்படி தொகை கட்டணமாக பெறப்பட்டதாக நளினி சிதம்பரம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
     
    இதற்கிடையே, சாரதா நிதி நிறுவன மோசடி தொடர்பாக நளினி சிதம்பரம் மீது கொல்கத்தா நீதிமன்றத்தில் 11-1-2019 அன்று சிபிஐ சார்பில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

    இந்நிலையில், சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கில் தன்னை கைது செய்வதற்கு தடை விதிக்க வேண்டும் என கொல்கத்தா ஐகோர்ட்டில் நளினி சிதம்பரம் சார்பில் முன்ஜாமின் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

    கொல்கத்தா ஐகோர்ட் நீதிபதி ஜாய்மால்யா பாக்ச்சி முன்னிலையில் நளினி சிதம்பரத்தின் முன்ஜாமின் மனு இன்று விசாரணைக்கு வந்தது. இவ்வழக்கு தொடர்பான விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என நளினி சிதம்பரத்துக்கு அறிவுறுத்திய நீதிபதி 6 வாரங்கள் வரை அவரை கைது செய்வதற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.

    இவ்வழக்கு தொடர்பாக தங்களின் நிலைப்பாடு குறித்து சி.பி.ஐ. மற்றும் நளினி சிதம்பரம் தரப்பில் இன்னும் 6 வாரங்களுக்குள் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யுமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது. #Saradhascam #NaliniChidambaram #CalcuttaHC #interimprotection
    Next Story
    ×