search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பயங்கரவாத தாக்குதலில் பலியான வீரரின் சடலத்துடன் மத்திய மந்திரி செல்பி எடுத்ததாக சர்ச்சை
    X

    பயங்கரவாத தாக்குதலில் பலியான வீரரின் சடலத்துடன் மத்திய மந்திரி செல்பி எடுத்ததாக சர்ச்சை

    மத்திய சுற்றுலாத்துறை மந்திரி அல்போன்ஸ் கன்னந்தானம், காஷ்மீரில் உயிரிழந்த வீரர் வசந்த குமாரின் இறுதிச் சடங்கில் பங்கேற்றபோது செல்பி எடுத்ததாக சர்ச்சை எழுந்தது. #AlphonsKannanthanam
    திருவனந்தபுரம்:

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் கடந்த வாரம் வியாழக்கிழமை ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பு நடத்திய, தற்கொலைத் தாக்குதலில் 40 வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    இந்நிலையில் உயிரிழந்த 40 வீரர்களில், கேரள மாநிலம் வயநாட்டை சேர்ந்த வசந்த குமாரும் ஒருவர் ஆவார். அவரது சடலம் சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டு இறுதிச் சடங்குகள் நடத்தப்பட்டன.

    இந்த இறுதிச் சடங்கில் பல்வேறு அரசியல் தலைவர்கள் மற்றும் பொது மக்கள் திரண்டு அஞ்சலி செலுத்தினர். இதில் கேரளாவைச் சேர்ந்த மத்திய சுற்றுலாத்துறை மந்திரி அல்போன்ஸ் கன்னந்தானம் பங்கேற்றார். வீரரின் சடலத்திற்கு மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்திய பின்னர், செல்பி எடுத்ததாக கூறி, சமூக வலைத்தளங்களில் புகைப்படம் பரவியது.

    அந்த படத்துடன், 'வசந்த குமாரின் இறுதிச்சடங்கு நடந்து கொண்டிருக்கிறது. உங்களைப் போன்றவர்களால்தான் எங்களைப் போன்றவர்கள் அமைதியாக வாழ முடிகிறது' என பதிவு செய்யப்பட்டிருந்தது.

    இந்த  செல்பி புகைப்படத்தை பார்த்த  நெட்டிசன்கள் பலர் கண்டனம் தெரிவித்தனர். இதுகுறித்து கமென்ட் செய்தவர்களுள் ஒருவர், 'நல்ல கேமராவை பயன்படுத்தி செல்பி எடுங்கள். உங்கள் கேவலமான முகத்தை பார்க்க முடியவில்லை' என்று கூறியிருந்தார்.

    இன்னொருவர் ‘ஹிட்லர் பாணியில் கன்னந்தானம் செயல்படுவதற்கு இந்த செல்பி ஓர் உதாரணம்' என்று பதிவிட்டுள்ளார். மற்றுமொருவர், ‘நாடகம் நடத்துவதற்கான நேரம் இதுவல்ல' என்று கூறியுள்ளார். இதுபோன்று கன்னந்தானத்தை விமர்சித்து கமென்டுகளும், மீம்ஸ்களும் குவிந்தன.

    ஆனால், செல்பி எடுத்ததை மத்திய மந்திரி கன்னந்தானம் மறுத்துள்ளார். வீரரின் இறுதிச்சடங்கில் பங்கேற்றபோது யாரோ ஒருவர் புகைப்படம் எடுத்து, தனக்கு எதிரான, தவறான தகவலை பரப்பியிருப்பதாக குற்றம் சாட்டினார். அத்துடன், தவறான தகவலை பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி, காவல்துறை தலைவருக்கு கடிதம் எழுதி உள்ளார். #AlphonsKannanthanam
    Next Story
    ×