search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எல்லை தாண்டிய பயங்கரவாதத்துக்கு பதிலடி- இந்தியாவிற்கு அமெரிக்கா ஆதரவு
    X

    எல்லை தாண்டிய பயங்கரவாதத்துக்கு பதிலடி- இந்தியாவிற்கு அமெரிக்கா ஆதரவு

    எல்லை தாண்டிய பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா மேற்கொள்ளும் நடவடிக்கைக்கு அமெரிக்கா ஆதரவு அளிப்பதாக தெரிவித்துள்ளது. #PulwamaAtack #AjitDoval #USSupportIndia
    புதுடெல்லி:

    காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் மீது ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி நடத்திய கொடூர தாக்குதலில் 40 வீரர்கள் பலியாகினர். இந்த தாக்குதலுக்கு உலகம் முழுவதிலும் இருந்து பல்வேறு தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    பாகிஸ்தான் தூதரை வரவழைத்து இந்திய உள்துறை அமைச்சகம் கண்டனம் தெரிவித்தது. மேலும், மிகவும் முக்கியத்துவமான நாடு என வர்த்தகத்துக்கான முன்னுரிமையுடன் பாகிஸ்தானுக்கு அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை இந்தியா ரத்து செய்தது. பாகிஸ்தானில் உள்ள இந்தியாவுக்கான தலைமை தூதரை உடனடியாக டெல்லி வருமாறு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது. புல்வாமா தாக்குதல் சம்பவம் குறித்து ஆலோசிக்க டெல்லியில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது.



    இதற்கிடையே, அமெரிக்காவின் பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன், இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, புல்வாமா தாக்குதல் தொடர்பாக, அவரிடம்  அஜித் தோவல் தெரிவித்தார். எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியா எடுக்கக்கூடிய நடவடிக்கைகளுக்கு அமெரிக்கா ஆதரவு அளிக்கும் என்று ஜான் போல்டன் உறுதியளித்துள்ளார்.

    இந்த உரையாடல் குறித்து ஜான் போல்டன் கூறுகையில், ‘தனது சுய பாதுகாப்பை உறுதி செய்து கொள்வதற்கு இந்தியாவிற்கு முழு அதிகாரம் உள்ளது. நாட்டின் பாதுகாப்பிற்காக இந்தியா எடுக்கும் நடவடிக்கைகளுக்கு அமெரிக்கா ஆதரவு அளிக்கும் என்று அஜித் தோவலிடம் நான் கூறினேன். ஜம்மு காஷ்மீர் தாக்குதல் தொடர்பாக அவரிடம் 2 முறை பேசினேன். இந்த துயர சம்பவத்திற்கு அமெரிக்கா இரங்கல் தெரிவித்துக் கொள்கிறது.

    பயங்கரவாத இயக்கங்களுக்கு ஆதரவு அளிப்பதை பாகிஸ்தான் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்பதில் அமெரிக்கா தெளிவாக இருக்கிறது. இது தொடர்பாக பாகிஸ்தானிடம் தொடர்ந்து ஆலோசனை நடத்தவும் தயாராக உள்ளது’ என்றார். #PulwamaAtack #AjitDoval #USSupportIndia
    Next Story
    ×