search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பா.ஜனதாவில் சஸ்பெண்டு ஆன கீர்த்தி ஆசாத் காங்கிரசில் சேருகிறார்
    X

    பா.ஜனதாவில் சஸ்பெண்டு ஆன கீர்த்தி ஆசாத் காங்கிரசில் சேருகிறார்

    பாஜகவில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட கீர்த்தி ஆசாத் எம்பி, இன்று ராகுல் காந்தி முன்னிலையில் காங்கிரசில் சேர உள்ளார். #KirtiAzad
    புதுடெல்லி:

    முன்னாள் கிரிக்கெட் வீரர் கீர்த்திஆசாத். இவர் பா.ஜனதா கட்சியின் எம்.பி. ஆகவும் இருக்கிறார். பீகார் மாநிலம் தர்பாங்கா தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

    டெல்லி கிரிக்கெட் சங்கத்தில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக தலைவராக இருக்கும் மத்திய மந்திரி அருண் ஜெட்லியை பகிரங்கமாக விமர்சனம் செய்தார்.

    இதனால் பா.ஜனதாவில் இருந்து ‘சஸ்பெண்டு’ செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் அவர் இன்று  ராகுல் காந்தி முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் சேர உள்ளார்.

    நேற்று மாலை டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து பேசினார். அதன் பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது அவர் கூறுகையில், “என் மீது தவறு எதுவும் இல்லாதபட்சத்தில் நான் பா.ஜனதாவில் இருந்து ‘சஸ்பெண்டு’ (தற்காலிக நீக்கம்) செய்யப்பட்டிருக்கிறேன். கட்சிக்கு விரோதமான எந்த நடவடிக்கையிலும் நான் ஈடுபடவில்லை.

    தனியார் நிறுவனமான டெல்லி கிரிக்கெட் சங்கத்துக்கு எதிராக போராடினேன். அதற்கும், கட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. பா.ஜனதா கட்சி தலைவர் அமித்ஷா எனது முதுகில் குத்தி விட்டார்.

    சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தல்களில் 3 வட இந்திய மாநிலங்களில் பா.ஜனதா ஆட்சியை பறி கொடுத்தது. அதன்மூலம் மாநிலங்களில் அக்கட்சி தனது செல்வாக்கை இழந்து விட்டது தெளிவாக தெரிகிறது. உத்தரபிரதேசம் மற்றும் பீகாரில் 120 பாராளுமன்ற தொகுதிகள் உள்ளன. இங்கு பா.ஜனதா அதிக தொகுதியை இழக்க நேரிடும்” என்றார்.

    கீர்த்தி ஆசாத் தர்பாங்கா தொகுதியில் 3 தடவை பா.ஜனதா சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். #KirtiAzad
    Next Story
    ×