search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காஷ்மீரில் பயங்கரவாதிகளின் கார் குண்டு தாக்குதலில் 44 துணை ராணுவ வீரர்கள் பலி - தலைவர்கள் கண்டனம்
    X

    காஷ்மீரில் பயங்கரவாதிகளின் கார் குண்டு தாக்குதலில் 44 துணை ராணுவ வீரர்கள் பலி - தலைவர்கள் கண்டனம்

    காஷ்மீரில் துணை ராணுவ வீரர்களின் வாகனங்களை குறிவைத்து பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்பினர் நடத்திய கார் குண்டு தாக்குதலில் 44 வீரர்கள் பலியானது நெஞ்சை நொறுக்குவதாக அமைந்துள்ளது. #JammuKashmir #CRPF #PulwamaAttack
    ஸ்ரீநகர்:

    காஷ்மீர் மாநிலத்தில் துணை ராணுவ வீரர்கள் (மத்திய ஆயுதப்படை போலீசார்) 2 ஆயிரத்து 547 பேர் விடுமுறையில் சென்றிருந்தனர். அவர்கள் அனைவரும் விடுமுறை முடிந்த நிலையில் நேற்று அதிகாலை 3.30 மணிக்கு ஜம்முவில் இருந்து 78 வாகனங்களில் பள்ளத்தாக்கு பகுதிக்கு திரும்பிக்கொண்டிருந்தனர். பாதுகாப்புக்கு கவச வாகனங்கள் உடன் சென்றன. மாலை 6 மணிக்குள் அவர்கள் சென்றடைய திட்டமிட்டிருந்தனர்.

    வழக்கமாக ஒரே நாளில் ஆயிரம் வீரர்கள் அணிவகுத்து செல்வதுதான் வழக்கம். ஆனால் கடந்த 2, 3 நாட்களாக அந்த நெடுஞ்சாலையில் மோசமான வானிலை மற்றும் நிர்வாக காரணங்களால் வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டிருந்தது. அதனால்தான் துணை ராணுவ வீரர்கள் ஒரே நாளில் 78 வாகனங்களில் மொத்தமாக சென்றனர்.



    அவர்களது வாகனங்கள், ஸ்ரீநகர்-ஜம்மு நெடுஞ்சாலையில் புலவாமா மாவட்டம், அவந்திப்போரா பகுதியில் அணிவகுத்து சென்று கொண்டிருந்தன.

    அப்போது பயங்கரவாதி ஒருவன் சற்றும் எதிர்பாராத வகையில் ஏராளமான வெடிகுண்டுகளை நிரப்பிய சொகுசு காரை துணை ராணுவ வீரர்கள் சென்ற பஸ்களில் ஒன்றை குறிவைத்து வேகமாக மோதினான். அப்போது பலத்த சத்தத்தோடு குண்டுகள் வெடித்து சிதறின. அதில் அந்த பஸ் முற்றிலும் நாசமானது. அத்துடன் வந்த பல வாகனங்களும் சேதம் அடைந்தன.

    தாக்குதலுக்கு உள்ளான பஸ்சில் பயணம் செய்த வீரர்கள் அனைவரும் உடல் சிதறிப்போய் விழுந்தனர்.

    இந்த கொடூர தாக்குதலில் 44 வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். சம்பவ இடம் ரத்தக்களறிகளாலும், வீரர்களின் உடல் உறுப்புகளாலும் போர்க்களம் போல காணப்பட்டது.

    கார் குண்டு தாக்குதல் நடைபெற்ற இடம் காஷ்மீர் மாநிலத்தின் கோடை கால தலைநகரான ஸ்ரீநகரில் இருந்து 30 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

    ஸ்ரீநகர்-ஜம்மு நெடுஞ்சாலையில் பயங்கரவாத தாக்குதல் நடைபெற்ற தகவல், காட்டுத்தீ போல பரவியது. அங்கு உடனடியாக மீட்பு படையினர் விரைந்தனர். பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டனர். தடய அறிவியல் வல்லுனர்கள், வெடிகுண்டு நிபுணர்கள் விரைந்தனர். தாக்குதல் நடந்த இடம் பாதுகாப்பு படைவீரர்களால் சுற்றி வளைக்கப்பட்டது.

    படுகாயம் அடைந்த வீரர்கள் அங்கிருந்து உடனடியாக மீட்கப்பட்டு, ராணுவ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அவர்களில் பலரது நிலை கவலைக்கிடமாக உள்ளதால், பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.

    இந்த தாக்குதலை பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிற மசூத் அசார் தலைமையிலான ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பினர் நடத்தி உள்ளனர். இந்த தாக்குதலுக்கு அவர்கள் பொறுப்பேற்றனர்.

    தாக்குதல் நடத்திய பயங்கரவாதி புலவாமா மாவட்டம், காக்கபோரா பகுதியை சேர்ந்த அதில் அகமது எனவும், அவன் கடந்த ஆண்டுதான் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத இயக்கத்தில் சேர்ந்துள்ளான் எனவும் போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

    தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட காரில் நிரப்பப்பட்டிருந்தவை, ஐ.இ.டி. வகையை சேர்ந்த பயங்கர வெடிகுண்டுகள் என தெரிய வந்துள்ளது.

    கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 18-ந் தேதி காஷ்மீரில் உரி ராணுவ தளத்திலும் இதே ஜெய்ஷ் இ பயங்கரவாத அமைப்பினர்தான் கொடூரமான தாக்குதல் நடத்தி 18 வீரர்களை கொன்று குவித்தது நினைவுகூரத்தக்கது.

    அந்த தாக்குதலுக்கு பின்னர் இந்த கார் குண்டு தாக்குதல்தான் மிக மோசமான தாக்குதலாக அமைந்துள்ளது.

    தாக்குதலுக்கு ஆளான பஸ்சில் பயணம் செய்த வீரர்கள், மத்திய ஆயுதப்படை போலீசின் 54-வது பட்டாலியனை சேர்ந்தவர்கள்.



    காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என நாட்டு மக்களுக்கு உறுதியளிப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். மேலும் அவர் கூறுகையில் இந்த தாக்குதலை பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ஜெய்ஷ்இ முகம்மது பயங்கரவாத அமைப்பு நடத்தியுள்ளது. இதற்கு கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என நாட்டு மக்களுக்கு உறுதி அளிக்கிறேன். வீரமரணம் அடைந்த நமது வீரர்களுக்கு நாட்டு மக்கள் அஞ்சலி செலுத்துகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

    மேலும் ஜம்மு-காஷ்மீர் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில் இந்திய மக்களுக்கும், இந்திய அரசுக்கும் வங்கதேசம் உறுதுணையாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.  உயிரிழந்த வீரர்களின் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலையும், காயம் அடைந்த வீரர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில் ஜம்மு-காஷ்மீர் புல்வாமாவில் பயங்கரவாதிகளின் தாக்குதல் காட்டுமிராண்டித்தனமானது என்று சோனியா காந்தி  தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளார்.  மேலும் அவர் கூறுகையில் தன்னலமின்றி நாட்டுக்காக பணியாற்றிய சிஆர்பிஎப் வீரர்களின் உயிர் தியாகம் மறக்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

    காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கூறுகையில் பயங்கரவாதிகளின் இந்த தாக்குதல் கோழைத்தனமானது எனவும்,  மிகுந்த மன வருத்தத்தை அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.  தாக்குதலில் காயமடைந்த சி.ஆர்.பி.எப். வீரர்கள் விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திப்பதாகவும் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

    பயங்கரவாதிகள் தாக்குதலுக்கு மத்திய மந்திரி அருண் ஜெட்லி, மேற்கு வங்காள மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரிகள் உமர் அப்துல்லா, மெகபூபா, உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். #JammuKashmir #CRPF #PulwamaAttack 
    Next Story
    ×