search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மோடிக்கு எதிராக 15 கட்சிகள் கூட்டணி- ராகுல் -மம்தா, கெஜ்ரிவால் கூட்டாக ஆலோசனை
    X

    மோடிக்கு எதிராக 15 கட்சிகள் கூட்டணி- ராகுல் -மம்தா, கெஜ்ரிவால் கூட்டாக ஆலோசனை

    தேசிய அளவில் பிரதமர் மோடிக்கு எதிராக 15 கட்சிகள் ஒன்று சேர்ந்துள்ளதை அடுத்து சரத்பவார் வீட்டில் ராகுல் -மம்தா, கெஜ்ரிவால் ஆகியோர் கூட்டாக ஆலோசனை நடத்தினார்கள். #modi #rahulgandhi #mamata #parliamentelection

    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவை வீழ்த்த எதிர் கட்சிகள் ஓரணியில் திரள நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றன. பிரதமர் மோடிக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியில் சந்திரபாபு நாயுடு, மம்தா பானர்ஜி தீவிரமாக இறங்கி உள்ளனர். இதற்காக சந்திரபாபு நாயுடு, டெல்லியில் எதிர்க்கட்சி தலைவர்களை ஒன்று திரட்டினார்.

    இதேபோல திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்காள முதல்- மந்திரியுமான மம்தா பானர்ஜி கடந்த மாதம் கொல்கத்தாவில் பிரமாண்ட கூட்டத்தை நடத்தினார். இதில் பெரும்பாலான எதிர்க்கட்சிகள் பங்கேற்றன.

    இதன் தொடர்ச்சியாக டெல்லி ஜந்தர்மந்தரில் நேற்று பிரமாண்ட பொதுக்கூட்டம் நடந்தது. ஆம் ஆத்மி தலைவரும், டெல்லி முதல்- மந்திரியுமான அரவிந்த் கெஜ்ரிவால் ஏற்பாடு செய்த இந்த கூட்டத்தில் பெரும்பாலான எதிர்க்கட்சிகள் பங்கேற்றன. எதிர்க்கட்சிகள் நடத்திய 3-வது பிரமாண்ட பேரணி இதுவாகும்.

    இந்த கூட்டத்தில் பேசிய அனைவரும் “பிரதமர் மோடி பாராளுமன்றத்தில் பேசிய கடைசி நாள். இத்துடன் அவரது அரசின் ஆயுட்காலம் முடிந்து விட்டது” என்று தெரிவித்தனர்.

    இந்த கூட்டம் முடிந்த பிறகு எதிர்க்கட்சியினர் முன்னாள் மத்திய மந்திரியும், தேசியவாத காங்கிரஸ் தலைவருமான சரத்பவார் வீட்டில் ஆலோசனை செய்தனர்.

    இந்த கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி, மம்தா பானர்ஜி, சந்திரபாபு நாயுடு, தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா உள்ளிட்ட 15 கட்சிகளை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.


    சுமார் 1 மணி நேரம் நடந்த இந்த கூட்டத்தில் பா.ஜனதாவுக்கு எதிராக மாநில கட்சிகளை பலப்படுத்துவது, 15 நாட்களுக்கு ஒருமுறை எதிர்க்கட்சிகள் ஒன்றுகூடி வியூகம் அமைப்பது, மாநிலங்கள் தோறும் பொதுக் கூட்டங்களை நடத்துவது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டன.

    இந்த கூட்டத்துக்கு பின்பு ராகுல் காந்தி நிருபர்களிடம் கூறும்போது, “இந்திய அமைப்புகள் மீது தாக்குதல் நடத்தும் பா.ஜனதாவுக்கு எதிராக போராடுவது என்ற பிரதான இலக்குடன் அனைவரும் இணைந்து செயல்படுவோம்” என்றார்.

    குறைந்தபட்ச செயல் திட்டத்தை உருவாக்கி தேர்தலுக்கு முந்தைய கூட்டணியை அமைக்க உள்ளோம். இனிவரும் நாட்களில் நாங்கள் ஒன்று பட்டு செயல்படுவோம்.

    மாநிலத்தில் பிரச்சினை இருந்தாலும் தேசிய அளவில் ஒன்றுபட்டு தேர்தலை சந்திப்போம். நாட்டின் நலனுக்காகவே தனது வாழ்க்கையை தியாகம் செய்து விட்டேன். அதற்காக எதையும் தியாகம் செய்ய தயாராக இருக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    காங்கிரஸ் கட்சியுடன் திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகளுக்கு இடையே கருத்து வேறுபாடு உள்ளது. மாநிலத்தில் அந்த கட்சியை எதிர்த்துதான் ஆட்சி செய்கிறது. தேசிய அளவில் மோடிக்கு எதிராக ஒன்று சேர்வது தொடர்பாக அவர்கள் தற்போது ஆலோசனை நடத்தியுள்ளனர்.

    தேர்தலுக்கு முந்தைய கூட்டணி அமைப்பது தொடர்பாக அவர்கள் முடிவு செய்துள்ளனர். இந்த கூட்டணியில் 15 கட்சிகள் இணைந்து செயல்பட இருக்கின்றன. #modi #rahulgandhi #mamata #parliamentelection

    Next Story
    ×