search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மோடி மண்ணில் நாளை ராகுல் பிரசாரம்
    X

    மோடி மண்ணில் நாளை ராகுல் பிரசாரம்

    பிரதமர் நரேந்திர மோடி பிறந்த மாநிலமான குஜராத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தை நாளை தொடங்குகிறார். #RahulGandhi #Rahulrally #RahulinGujarat #Gujaratrally
    அகமதாபாத்:

    16-வது பாராளுமன்ற கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவடைந்த நிலையில் 17-வது மக்களவைக்கான உறுப்பினர்களை தேர்வு செய்வதற்காக விரைவில் பாராளுமன்ற பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளது.

    தேர்தலுக்கான தேதி தொடர்பான அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வெளியாகவுள்ள நிலையில் மீண்டும் மத்தியில் ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள பா.ஜ.க.வும், இழந்த ஆட்சியை பிடித்துவிட காங்கிரஸ் கட்சியும் முனைப்பு காட்டி வருகின்றன.

    இந்த இரண்டு கட்சிகளும் இல்லாத ஒரு ஆட்சியை உருவாக்க சில மாநிலங்களில் உள்ள திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் முயன்று வருகின்றன. பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்ப மனுக்களை பெறுவது, வேட்பாளர்கள் தேர்வு என அனைத்து கட்சிகளிலும் பரபரப்பு தொற்றியுள்ளது.

    இந்நிலையில், பிரதமர் மோடி பிறந்த மாநிலமான குஜராத்தில் நாளை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தனது முதல்கட்ட பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார். வல்சாத் மாவட்டம், லால்டுங்ரி பகுதியில் நடைபெறும் காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் நாளை பிற்பகல் அவர் உரையாற்றுகிறார். 

    கடந்த 2017-ம் ஆண்டு நடைபெற்ற குஜராத் சட்டசபை தேர்தலின்போது பிரசாரம் செய்வதற்காக இங்கு வந்திருந்த ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியின் தலைவராக பதவியேற்ற பின்னர் முதல்முறை குஜராத்துக்கு மீண்டும் வருவதால் சிறப்பான முறையில் அவரை வரவேற்பதற்கான ஏற்பாடுகளை அம்மாநில காங்கிரஸ் பிரமுகர்கள் செய்து வருகின்றனர்.

    2017-ம் ஆண்டு தேர்தலில் குஜராத் சட்டசபையில் உள்ள 182 இடங்களில் 99 தொகுதிகளில் பா.ஜ.க. வெற்றி பெற்றது. அதற்கு முன்னர் 60 எம்.எல்.ஏ.க்களாக இருந்த காங்கிரசின் பலம் 77 ஆக உயர்ந்தது.

    ஆனால், 2009-பாராளுன்ற தேர்தலில் 11 எம்.பி. தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்த காங்கிரஸ்,  2014-பாராளுன்ற தேர்தலில் ஒரு இடத்தைகூட பிடிக்க முடியாமல் இங்கு படுதோல்வி அடைந்தது. அம்மாநிலத்தில் உள்ள மொத்தம் 26 பாராளுமன்ற தொகுதிகளிலும் பா.ஜ.க. வேட்பாளர்களே வெற்றி பெற்றனர் என்பது நினைவிருக்கலாம். #RahulGandhi #Rahulrally #RahulinGujarat #Gujaratrally
    Next Story
    ×