search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆதார் அட்டையை அமல்படுத்தி உலகை திரும்பிப் பார்க்க வைத்தோம் - பாராளுமன்றத்தில் மோடி பெருமிதம்
    X

    ஆதார் அட்டையை அமல்படுத்தி உலகை திரும்பிப் பார்க்க வைத்தோம் - பாராளுமன்றத்தில் மோடி பெருமிதம்

    மக்கள் தொகையில் 2-வது பெரிய நாடான இந்தியாவில் ஆதார் அட்டை திட்டத்தை வெற்றிகரமாக அமல்படுத்தி உலகையே திரும்பிப் பார்க்க வைத்தது எங்கள் நான்கரை ஆண்டுகால ஆட்சியின் சாதனைகளில் ஒன்று என மோடி குறிப்பிட்டார். #Parliament #PMModi #LokSabhaadjourns
    புதுடெல்லி:

    பாராளுமன்ற கூட்டத்தின் கடைசி நாள் என்பதால், இன்று பேசிய பல கட்சித்தலைவர்கள் உருக்கமாக உரையாற்றினர். இறுதியாக, பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

    லோக்சபாவை சிறப்பாக வழிநடத்தியதற்காக சபாநாயகர் சுமித்ரா மகாஜனுக்கு வாழ்த்து தெரிவிக்கிறேன். பல தொடர்கள் ஆக்கப்பூர்வமாக இருந்தன. இது மகிழ்ச்சி அளிக்கிறது. 16வது லோக்சபாவில் என்னுடன் பணியாற்றிய அனைத்து எம்.பி.,க்களுக்கும் நன்றி தெரிவிக்கிறேன்.

    டிஜிட்டல் பாதையில் இந்தியா பயணிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. கடந்த 4 ஆண்டுகளில் செயற்கைக்கோள்கள் அதிகளவில் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளன. வங்கதேசம்-இந்தியா இடையிலான நில பிரச்சினையை தீர்த்துள்ளோம்.

    பெண் எம்.பி-க்களுக்கு எனது வரவேற்பையும், வாழ்த்துக்களையும் தெரிவிக்கிறேன். பாதுகாப்பு மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் பெண்கள் என்பது பெருமை. உலக பொருளாதாரத்தில் இந்தியா 6-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

    இதுவரை இல்லாத அளவுக்கு மகளிர் அதிகம் பேர் இடம் பெற்றுள்ள அமைச்சரவை இது. இங்கிருந்து 85 சதவிகித மனநிறைவோடு விடைபெறுகிறோம். இந்திய தேசமே தற்போது எங்களது அரசின் மீது முழு நம்பிக்கை வைத்துள்ளது.



    ஐ.நா. அவையில் இந்தியாவின் பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டன; கடந்த 5 ஆண்டுகளில் இடர்ப்பாடுகளின்போது அண்டை நாடுகளுக்கு அனைத்து உதவிகளும் செய்திருக்கிறோம். வெளிநாட்டுத் தலைவர்களும் தற்போது இந்திய தலைவர்களை மதிக்கத் தொடங்கியுள்ளனர். எனது ஆட்சியில் வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு கூடுதல் மரியாதை கிடைத்துள்ளது. பயன்பாட்டில் இல்லாத 1400 சட்டங்கள் ஒழிக்கப்பட்டன.

    மக்கள் தொகையில் 2-வது பெரிய நாடான இந்தியாவில் ஆதார் அட்டை திட்டத்தை வெற்றிகரமாக அமல்படுத்தி உலகையே திரும்பிப் பார்க்க வைத்தது எங்கள் நான்கரை ஆண்டுகால ஆட்சியின் சாதனைகளில் ஒன்று.

    பாஜக அரசாங்கம் மக்களுக்காகவும் நாட்டுக்காகவும் 100 சதவீதத்திற்கும் மேல் உழைத்துள்ளது. உண்மையாக கட்டிப்பிடிப்பதற்கும், வலுக்கட்டாயமாக கட்டிப் பிடிப்பதற்குமான வித்தியாசம் எனக்கு தெரியும். கடந்த 5 ஆண்டுகளில் உங்களிடம் இருந்து பல விஷயங்களை கற்றுக் கொண்டு உள்ளேன். என்னை வழிநடத்திய மூத்த தலைவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார். #Parliament #PMModi #LokSabhaadjourns
    Next Story
    ×