search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    3 மாநில தேர்தல் வெற்றி காங்கிரசுக்கு புதிய நம்பிக்கையை தந்துள்ளது - சோனியா பேச்சு
    X

    3 மாநில தேர்தல் வெற்றி காங்கிரசுக்கு புதிய நம்பிக்கையை தந்துள்ளது - சோனியா பேச்சு

    3 மாநில தேர்தல் முடிவுகள் தந்த வெற்றியால் புதுப்பிக்கப்பட்ட ஆற்றலுடன் வரும் பாராளுமன்ற தேர்தலை காங்கிரஸ் புதிய உத்வேகத்துடன் சந்திக்கும் என சோனியா காந்தி குறிப்பிட்டுள்ளார். #Congress #SoniaGandhi
    புதுடெல்லி:

    இந்திய பாராளுமன்றத்தின் 16-வது மக்களவையின் ஆயுட்காலம் வரும் மே மாதத்துடன் நிறைவடைகிறது. 17-வது மக்களவைக்கான உறுப்பினர்களை தேர்வு செய்வதற்காக விரைவில் பாராளுமன்ற பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளது.

    16-வது மக்களவையின் இறுதி (இடைக்கால) பட்ஜெட் சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்டு, ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது உறுப்பினர்கள் உரையாற்றினர். இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் இன்றுடன் முடிவடைகிறது.

    மீண்டும் பாராளுமன்ற தேர்தல் முடிந்து முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் 17-வது மக்களவை கூட்டம் வரும் மே அல்லது ஜூன் மாதவாக்கில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில், பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் அங்கம்வகிக்கும் காங்கிரஸ் உறுப்பினர்களின் பொதுக்குழு கூட்டம் இன்று டெல்லியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா, மூத்த தலைவர்கள் குலாம் நபி ஆசாத், மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோர் உரையாற்றினர்.

    அப்போது பேசிய சோனியா காந்தி, ’காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்றுள்ள ராகுல் காந்தி, கட்சியின் மூத்த தலைவர்களையும், இளையதலைமுறையினரையும் ஒன்றிணைத்து ஒரு சிறப்பான அணியை ஏற்படுத்தியதால் காங்கிரசுக்கு புதிய ஆற்றல் கிடைத்துள்ளது.

    நமது எதிர்ப்பாளர்கள் தங்களை வெல்ல யாருமே இல்லை என்ற தோற்றத்தை முன்னர் ஏற்படுத்தி வைத்திருந்தனர். ஆனால், நமது கட்சியின் தலைவர் ராகுல் காந்தி, பல லட்சக்கணக்கான தொண்டர்களை ஒன்றுதிரட்டி அவர்களின் அயராத உழைப்பின்மூலம் எதிரிகளுடன் மோதி மிகப்பெரிய வெற்றியை தேடித்தந்துள்ளார்.

    நமது நாட்டின் ஜனநாயக அமைப்புகளின் அடித்தளங்கள், மக்களாட்சி தத்துவத்தின் மதச்சார்பின்மை அனைத்தும் மோடி தலைமையிலான அரசால் சிதைக்கப்பட்டுள்ளன. அரசியலமைப்பின் நன்மதிப்பும் கோட்பாடுகளும் இந்த அரசின் தாக்குதலுக்குள்ளாகி விட்டன.

    அரசியல் எதிரிகள் குறிவைத்து வேட்டையாடப்படுகின்றனர். எதிர்ப்புக்குரல் ஒடுக்கப்பட்டு வருகிறது. அனைத்து சுதந்திரத்திலும் மிக உயர்ந்த சுதந்திரமான பேச்சுரிமைக்கு திரையிடப்பட்டு, மவுனப்படுத்தப்பட்டு வருகிறது.



    உண்மையும், வெளிப்படைத்தன்மையும் புறம்தள்ளப்பட்டு பொய்கள், உளறல்கள், தவறான தகவல்களை அளிப்பது போன்றவைதான் மோடி அரசின் ஆட்சிக்கான தத்துவமாக உள்ளது. நாடு முழுவதும் பாதுகாப்பற்றத்தன்மையும் அச்சஉணர்வும்தான் மேலோங்கி வருகிறது.

    சமீபத்தில் நடந்துமுடிந்த 5 மாநில தேர்தல்களில் ராஜஸ்தான், சத்திஸ்கர் மற்றும் மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் நாம் பெற்றுள்ள வெற்றி நமக்கு புதிய நம்பிக்கையையும், உத்வேகத்தையும் அளித்துள்ளது. புதுப்பிக்கப்பட்ட இந்த ஆற்றலுடன் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலை நாம் சந்தித்து வெற்றிபெற வேண்டும்’ என குறிப்பிட்டார். #Congress #SoniaGandhi
    Next Story
    ×