search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து - டெல்லியில் சந்திரபாபு நாயுடு நாளை உண்ணாவிரதம்
    X

    ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து - டெல்லியில் சந்திரபாபு நாயுடு நாளை உண்ணாவிரதம்

    ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் என்ற வாக்குறுதியை நிறைவேற்றாத மத்திய அரசை கண்டித்து டெல்லியில் சந்திரபாபு நாயுடு நாளை உண்ணாவிரதம் மேற்கொள்கிறார். #ChandrababuNaidu #ChandrababuNaiduhungerstrike
    புதுடெல்லி:

    ஆந்திராவில் இருந்து சில மாவட்டங்களை பிரித்து தெலுங்கானா என்ற புதிய மாநிலம் உருவாக்கப்பட்டபோது, இதனால் ஆந்திராவுக்கு ஏற்படும் பொருளாதார இழப்பை சரிகட்ட ஆந்திராவுக்கு சிறப்பு மாநில அந்தஸ்து அளிக்கப்பட்டு, சிறப்பு சலுகைகள் வழங்கப்படும் என மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அரசு முன்னர் வாக்குறுதி அளித்திருந்தது. 

    ஆனால், பின்னர் ஆட்சிக்கு வந்த மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அந்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் இருந்து வருகிறது. இந்த பிரச்சனையை மையமாக வைத்து ஆந்திர முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு பிரதமர் அலுவலகத்து பலமுறை கடிதம் அனுப்பியுள்ளார். 

    இருப்பினும், தங்களுக்கான நீதி கிடைக்காததால் தேசிய ஜனநாயக கூட்டணியில் முன்னர் அங்கம்வகித்த தெலுங்கு தேசம் கட்சி கடந்த ஆண்டு கூட்டணியில் இருந்து விலகியது. மோடி அரசுக்கு எதிராக தெலுங்கு தேசம் கட்சி சார்பில் பாராளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியடைந்தது நினைவிருக்கலாம்.

    அதன்பிறகு பாராளுமன்ற கூட்டத்தொடர்களின்போது ஆந்திர மாநிலத்தை சேர்ந்த எம்.பி.க்கள் ஆந்திராவுக்கு சிறப்பு மாநில அந்தஸ்து அளிக்கும் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றர்.

    இந்நிலையில், ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் என்ற வாக்குறுதியை நிறைவேற்றாத மத்திய அரசை கண்டித்து டெல்லியில் சந்திரபாபு நாயுடு நாளை உண்ணாவிரதம் மேற்கொள்கிறார்.

    டெல்லியில் உள்ள ஆந்திரா பவன் வளாகத்தில் நாளை காலை 8 மணி முதல் இரவு 8 மணிவரை நடைபெறும் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், ஆந்திர மாநில அரசு பணியாளர்கள் சங்கங்களை சேர்ந்த தலைவர்கள் மற்றும் அம்மாநிலத்தின் மாணவர் சங்கங்களை சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்பார்கள்.

    இந்த உண்னாவிரதப் போராட்டத்துக்கு பின்னர் நாளை மறுநாள் (12-ம் தேதி) இதே கோரிக்கையை வலியுறுத்தி ஜனாதிபதியை நேரில் சந்தித்து சந்திரபாபு நாயுடு மனு அளிப்பார் எனவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது. #ChandrababuNaidu #ChandrababuNaiduhungerstrike #hungerstrikeinDelhi #specialstatusforAP
    Next Story
    ×