search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்தியா-இலங்கை உறவில் பாதிப்பு: ராஜபக்சே
    X

    இந்தியா-இலங்கை உறவில் பாதிப்பு: ராஜபக்சே

    2014-ம் ஆண்டு ஆட்சி மாற்றத்திற்கு பின்பு, இந்தியா-இலங்கை உறவில் பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாக இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே தெரிவித்துள்ளார். #Rajapaksa
    பெங்களூரு :

    பெங்களூருவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள இலங்கையின் முன்னாள் அதிபர் ராஜபக்சே வந்திருந்தார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-

    எனது தலைமையில் இலங்கையில் ஆட்சி நடந்த போது, இந்தியாவுடனான நட்புறவு சிறப்பாக இருந்தது. இந்தியாவில் 2014-ம் ஆண்டு ஆட்சி மாற்றத்திற்கு பின்பு புதிய அரசு உருவானதும் இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இருந்த உறவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு முறையும் இரு நாடுகளிலும் ஆட்சி மாற்றம் ஏற்படும் போது, இதுபோன்ற உறவில் பாதிப்பு ஏற்படுவது உண்டு. இரு நாடுகள் இடையே உள்ள உறவில் பாதிப்பு ஏற்படுவது சரியல்ல.

    2014-ம் ஆண்டுக்கு முன்பாக 1980-ம் ஆண்டிலும் இந்தியாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டபோது கூட இந்தியா-இலங்கை உறவில் விரிசல் உண்டாகி இருந்தது. என்றாலும், இரு நாடுகளுக்கு இடையே உண்டாகும் விரிசல்களை தவிர்த்திருக்கலாம்.

    இந்தியா மற்றும் இலங்கையின் அரசியல் கட்சி தலைவர்கள் இடையே உறவை வளர்த்துக்கொள்ள வேண்டியது அவசியமானதாகும். ஏனெனில் வெளியுறவுத்துறை, பொருளாதாரம், பாதுகாப்பு ஆகியவை அரசியல் கட்சி தலைவர்களிடமே இருக்கிறது. இலங்கையில் எதிர்க்கட்சியாக நான் இருந்தாலும், இந்தியாவில் ஆளுங்கட்சியுடன் நல்ல உறவு இருக்கிறது. அண்டை நாடுகளான இந்தியாவும், இலங்கையும் தங்களது பாதுகாப்புக்கு உதவி செய்ய வேண்டும்.

    தேவேகவுடாவை, ராஜபக்சே சந்தித்து பேசிய காட்சி.

    இந்திய தலைவர்கள் எதிர்பார்ப்பது இலங்கை மூலம் 3-வது நபரால் எந்த அச்சுறுத்தலும் வந்து விடக்கூடாது என்று நினைக்கிறார்கள். அதையே இலங்கை தலைவர்களும் எதிர்பார்க்கின்றனர். எல்லாவற்றுக்கும் மேலாக இரு நாடுகளுடையே நடைபெறும் பேச்சு வார்த்தை பாதுகாப்பை உறுதிப்படுத்தும் என்று நம்புகிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பெங்களூருவுக்கு வந்திருந்த முன்னாள் அதிபர் ராஜபக்சே, முன்னாள் பிரதமர் தேவேகவுடா மற்றும் துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் ஆகியோரை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார்.

    இதற்கிடையே இலங்கையில் 2009-ம் ஆண்டு நடந்த போரில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டதை கண்டித்தும், ராஜபக்சே பெங்களூருவுக்கு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் பெங்களூரு சுதந்திர பூங்காவில் நேற்று காலையில் கருநாடக தமிழர் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு தமிழ் அமைப்புகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் ராஜபக்சேவுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். #Rajapaksa

    Next Story
    ×