search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மோடி அரசை எதிர்த்து மம்தா, சந்திரபாபு நாயுடு டெல்லியில் தர்ணா போராட்டம்
    X

    மோடி அரசை எதிர்த்து மம்தா, சந்திரபாபு நாயுடு டெல்லியில் தர்ணா போராட்டம்

    மோடி அரசை எதிர்த்து பாராளுமன்ற கூட்டத்தொடர் நிறைவு பெறும் 13-ந்தேதியும், 14-ந்தேதியும் மம்தா பானர்ஜி, சந்திரபாபு நாயுடு டெல்லியில் தர்ணா போராட்டம் நடத்த உள்ளனர். #Mamata #Chandrababunaidu
    புதுடெல்லி:

    மேற்கு வங்க மாநிலத்தில் சாரதா சிட்பண்ட்ஸ் மோசடியில் தொடர்புடைய போலீஸ் கமி‌ஷனர் ராஜீவ்குமாரை விசாரிக்க சி.பி.ஐ. நடவடிக்கை எடுத்ததற்கு அம்மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

    மத்திய அரசு அரசியல் சட்டத்தை அழிப்பதாக கூறி அவர் கொல்கத்தாவில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இந்த போராட்டம் 3 நாட்கள் நடைபெற்றது.

    கொல்கத்தா போலீஸ் கமி‌ஷனர் ராஜீவ்குமார் சி.பி.ஐ. விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்ட பிறகு மம்தா பானர்ஜி அதை ஏற்பதாக கூறினார். என்றாலும் அரசியல் சட்டத்தை பாதுகாக்கவும், கூட்டாட்சி தத்துவத்துக்கு முக்கியத்துவம் அளிக்கக் கோரியும் டெல்லியில் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்து இருந்தார்.

    அதன்படி அடுத்த வாரம் மம்தா பானர்ஜி டெல்லியில் போராட்டம் நடத்த உள்ளார். அடுத்த வாரம் புதன்கிழமை பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் முடிவடைகிறது. அந்த சமயத்தில் போராட்டத்தை தீவிரப்படுத்த மம்தா பானர்ஜி முடிவு செய்துள்ளார்.

    இந்த போராட்டத்தில் ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடுவும் கலந்து கொள்ள இருக்கிறார். மம்தா பானர்ஜிக்கு முன்னதாக நாளை மறுநாள் (திங்கட்கிழமை) ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கோரி சந்திரபாபு நாயுடு டெல்லியில் தர்ணா போராட்டம் நடத்துகிறார்.

    இதற்காக 2 ரெயில்களில் ஆந்திராவில் இருந்து தெலுங்குதேசம் தொண்டர்கள் இன்று டெல்லிக்கு புறப்பட்டு சென்றனர். டெல்லியை குலுங்க வைக்கும் வகையில் சந்திரபாபு நாயுடுவின் போராட்டம் இருக்கும் என்று தெரிகிறது.

    டெல்லியில் ஆந்திர பவன் வளாகத்தில் இதற்காக சிறப்பு மேடை அமைக்கப்பட்டு வருகிறது. அந்த மேடையில் சந்திரபாபு நாயுடுவும், தெலுங்கு தேச கட்சி மூத்த தலைவர்களும் அமர்ந்து தர்ணா செய்ய உள்ளனர்.

    சந்திரபாபு நாயுடுவின் தர்ணா போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து பல்வேறு எதிர்க்கட்சி தலைவர்கள் டெல்லியில் திரள உள்ளனர். இதனால் அடுத்த வாரம் திங்கட்கிழமை முதல் சில நாட்களுக்கு டெல்லியில் அடுத்தடுத்து பரபரப்பு ஏற்பட உள்ளது.

    பாராளுமன்ற கூட்டத்தொடர் நிறைவு பெறும் 13-ந்தேதியும், 14-ந்தேதியும் மம்தா பானர்ஜி டெல்லியில் தர்ணா செய்கிறார். இதற்காக மேற்கு வங்காளத்தில் இருந்து ஆயிரக்கணக்கான திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் டெல்லிக்கு வர உள்ளனர்.

    இதனால் கூட்டத்தினரை சமாளிக்க எத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுவது என்று டெல்லியில் போலீசார் ஆலோசனை நடத்தி வருகிறார்கள். #Mamata #Chandrababunaidu

    Next Story
    ×