search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எதிர்க்கட்சி உறுப்பினர்களின் அமளியால் 3-வது நாளாக முடங்கியது மாநிலங்களவை
    X

    எதிர்க்கட்சி உறுப்பினர்களின் அமளியால் 3-வது நாளாக முடங்கியது மாநிலங்களவை

    குடியுரிமை சட்டத்திருத்த மசோதா, தேசிய குடிமக்கள் பதிவேடு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை எழுப்பி எதிர்க்கட்சி எம்பிக்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் மூன்றாவது நாளாக மாநிலங்களவை முடங்கியது. #BudgetSession #Budget2019 #RajyaSabha
    புதுடெல்லி:

    பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த மாதம் 31-ம் தேதி தொடங்கியது. முதல் நாளில் மக்களவை மற்றும் மாநிலங்களவையின் கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார். மறுநாள் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. திங்கட்கிழமையில் இருந்து ஜனாதிபதியின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது விவாதம் நடைபெற்று வருகிறது. 

    இந்நிலையில், இன்று காலை பாராளுமன்றம் கூடியது. அப்போது, ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பிஜு ஜனதா தளம் எம்பி லாடு கிஷோர் ஸ்வெயின் (வயது 71) மறைவுக்கு மக்களவையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. சபாநாயகர் சுமித்ரா மகாஜன் இரங்கல் தீர்மானத்தை வாசித்தார். இதையடுத்து மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

    மாநிலங்களவையில் அவை நடவடிக்கைகள் தொடங்கியதும், குடியுரிமை சட்டத்திருத்த மசோதா, தேசிய குடிமக்கள் பதிவேடு, கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீட்டுக்கான ரோஸ்டர் முறை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை எழுப்பி எதிர்க்கட்சி எம்பிக்கள் முழக்கம் எழுப்பினர். 

    தேசிய குடிமக்கள் பதிவேடு விவகாரம் தொடர்பாக உள்துறை மந்திரி விளக்கம் அளிக்க வேண்டும் எனக் கோரி காங்கிரஸ் சார்பில் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. உள்துறை மந்திரி பதவி விலக வேண்டும் என்றும் காங்கிரஸ் எம்பிக்கள் வலியுறுத்தினர்.  உறுப்பினர்களின் அமளி காரணமாக 2 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது.

    2 மணிக்கு அவை கூடியபோதும் அமளி நீடித்தது. ராஷ்டிரிய ஜனதா தளம், சமாஜ்வாடி கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி, திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்பிக்கள் கோரிக்கைகளை முன்வைத்து அவையின் மையப்பகுதிக்கு சென்று முழக்கங்கள் எழுப்பினர். 

    உறுப்பினர்களை அமைதி காக்கும்படி துணை சபாநாயகர் ஹரிஷ்வன்ஷ் கேட்டுக்கொண்டார். ஆனால் உறுப்பினர்கள் அரசுக்கு எதிராக தொடர்ந்து கோஷமிட்டனர். இதனால் அவையை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. எனவே, நாளை காலை 11 மணி வரை அவையை ஒத்திவைப்பதாக துணை சபாநாயகர் அறிவித்தார். இதன்மூலம் தொடர்ந்து 3 நாட்கள் மாநிலங்களவை முடங்கி உள்ளது. 

    நாளை நடைபெற உள்ள கூட்டுக் கூட்டத்தில், ஜனாதிபதியின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது தொடர்ந்து விவாதம் நடைபெறும் என தெரிகிறது. விவாதத்திற்கு பிறகு பிரதமர் மோடி பதிலளித்து உரையாற்றுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. #BudgetSession #Budget2019 #RajyaSabha
    Next Story
    ×