search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஹெலிகாப்டர் தரையிறங்க அனுமதி மறுப்பு- சாலை மார்க்கமாக மேற்கு வங்கம் செல்லும் யோகி ஆதித்யநாத்
    X

    ஹெலிகாப்டர் தரையிறங்க அனுமதி மறுப்பு- சாலை மார்க்கமாக மேற்கு வங்கம் செல்லும் யோகி ஆதித்யநாத்

    உபி முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் ஹெலிகாப்டர் தரையிறங்குவதற்கு மேற்கு வங்க அரசு அனுமதி வழங்காததால், ஜார்க்கண்ட் வரை ஹெலிகாப்டரில் சென்று அங்கிருந்து சாலை மார்க்கமாக செல்கிறார். #YogiAdityanath #BJP
    லக்னோ:

    பாராளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பாஜக பிரச்சாரத்தை தீவிரப்படுத்தி உள்ளது. கட்சியின் தலைவர் அமித் ஷா, பிரதமர் மோடி, உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட தலைவர்கள் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பொதுக்கூட்டங்களில் உரையாற்றுகின்றனர். அவ்வகையில், மேற்கு வங்க மாநிலம் புருலியா மாவட்டத்தில் இன்று நடைபெறும் பிரச்சார கூட்டத்தில் உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

    இதற்காக யோகி ஆதித்யநாத் உ.பி.யில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் புருலியா செல்ல திட்டமிடப்பட்டது. ஆனால், அங்கு ஹெலிகாப்டரை தரையிறக்குவதற்கு அனுமதி கிடைக்கவில்லை. எனவே, ஜார்க்கண்ட் மாநிலம் போகாரோ நகர் வரை ஹெலிகாப்டரில் சென்று, அங்கிருந்து காரில் புருலியா செல்ல முடிவு செய்தார் யோகி. அதன்படி, இன்று பிற்பகல் சட்டசபைக் கூட்டத்தை முடித்துக்கொண்டு உ.பி.யில் இருந்து ஹெலிகாப்டரில் புறப்பட்டார். 3.40 மணியளவில் போகாரோ சென்றடைந்த அவர், அங்கிருந்து காரில் புருலியா சென்றார்.

    முன்னதாக, ஹெலிகாப்டர் தரையிறங்க அனுமதி மறுக்கப்பட்டது தொடர்பாக கருத்து தெரிவித்த யோகி, பழிவாங்கல், வன்முறை மற்றும் ஊழல் நடவடிக்கைகளில் மம்தா பானர்ஜி அரசு ஈடுபட்டு வருவதாக குற்றம்சாட்டினார்.

    இதேபோல், பிப்ரவரி 3ம் தேதி மேற்கு வங்கத்தில் இரண்டு இடங்களில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் யோகி ஆதித்யநாத் பங்கேற்பதாக இருந்தது. ஆனால், யோகியின் ஹெலிகாப்டர் தரையிறங்குவதற்கு அரசு அனுமதி வழங்கவில்லை. எனவே, ஒரு நிகழ்ச்சியில் தொலைபேசி வாயிலாக யோகி உரையாற்றினார்.



    பாஜக பொதுக்கூட்டங்களுக்கு அனுமதி மறுப்பு, சிபிஐ சோதனை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் மேற்கு வங்க அரசுக்கும் மத்திய அரசுக்கும் இடையே மோதல் போக்கு உருவாகியிருப்பது குறிப்பிடத்தக்கது. #YogiAdityanath #BJP
    Next Story
    ×