search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஸ்டாலினை தொடர்ந்து ராகுல் காந்தி பிரதமராக லல்லு மகன் ஆதரவு
    X

    ஸ்டாலினை தொடர்ந்து ராகுல் காந்தி பிரதமராக லல்லு மகன் ஆதரவு

    காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பிரதமர் பதவி வகிக்க அனைத்து தகுதிகளையும் கொண்டுள்ளார். அவர் பிரதமர் ஆவதை நான் வரவேற்கிறேன் என்று லல்லுபிரசாத்தின் மகன் தேஜஸ்வி யாதவ் ஆதரவு தெரிவித்துள்ளார். #Rahulgandhi #TejashwiYadav
    பாட்னா:

    பா.ஜனதாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சி நடந்து வந்தாலும் அது முழுமையான வெற்றியை பெறவில்லை.

    குறிப்பாக உத்தரபிரதேசத்தில் காங்கிரசுக்கு மாற்றாக மாயாவதி- அகிலேஷ் யாதவ் கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன. இதுபோன்ற நிலை பல மாநிலங்களில் நிலவுகிறது. மேலும் எதிர்க்கட்சி அணியில் பிரதமர் வேட்பாளர் யார் என்பதிலும் ஒருமித்த கருத்து ஏற்படவில்லை.

    காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பிரதமராவதை மம்தா பானர்ஜி, அகிலேஷ் யாதவ், மாயாவதி போன்றோர் விரும்பவில்லை என்று கூறப்படுகிறது.

    இந்த நிலையில் ராகுல் காந்தி பிரதமர் ஆவதற்கு ஆதரவு தெரிவிப்பதாக காங்கிரஸ் கூட்டணியில் உள்ள தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார். மதசார்பற்ற ஜனதா தள தலைவர் தேவேகவுடாவும் இதற்கு ஆதரவு தெரிவித்தார்.

    மற்றபடி எதிர்க்கட்சியில் உள்ளவர்கள் இதுசம்பந்தமாக எந்த கருத்தும் சொல்லாமல் மவுனம் சாதித்து வந்தனர்.

    இந்த நிலையில் காங்கிரஸ் கூட்டணியில் இடம் பெற்றுள்ள லல்லுபிரசாத்தின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியும் இப்போது ராகுல்காந்தி பிரதமர் ஆவதற்கு ஆதரவு தெரிவித்து உள்ளது.

    காங்கிரஸ் கட்சியின் பிரமாண்ட மாநாடு பீகார் தலைநகரம் பாட்னாவில் நேற்று நடைபெற்றது. இதில் ராகுல்காந்தி மற்றும் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் முதல்-மந்திரிகள் மற்றும் பல்வேறு தலைவர்கள் கலந்து கொண்டனர்.

    அந்த கூட்டத்தில் லல்லுபிரசாத்தின் மகனும் தற்போது கட்சியை நடத்தி வருபவருமான தேஜஸ்வி யாதவ் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது:-

    ராகுல்காந்தி பிரதமர் பதவி வகிக்க அனைத்து தகுதிகளையும் கொண்டுள்ளார். அவர் பிரதமர் ஆவதை நான் வரவேற்கிறேன்.

    ஆனால் அவருக்கு ஒரு முக்கியமான கடமை ஒன்று உள்ளது. ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளையும் பா.ஜனதாவுக்கு எதிராக ஒருங்கிணைக்கும் முயற்சியை அவர் மேற்கொள்ள வேண்டும்.

    எதிர்க்கட்சிகளும், ஒருசில கருத்து வேறுபாடுகளை மறந்து ஒரே குடையின் கீழ் வரவேண்டும். நமது ஒரே இலக்கு பா.ஜனதாவை மீண்டும் ஆட்சிக்கு வரவிடாமல் தடுப்பது என்பது மட்டுமாகவே இருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார். #Rahulgandhi #TejashwiYadav

    Next Story
    ×