search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராஜஸ்தானில் ராம்கர் இடைத்தேர்தலில் காங்கிரஸ் வெற்றி
    X

    ராஜஸ்தானில் ராம்கர் இடைத்தேர்தலில் காங்கிரஸ் வெற்றி

    ராஜஸ்தான் மாநிலம் ராம்கர் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் சுமார் 12ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். #Congress #RamgarhElection
    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 7-ந்தேதி சட்டசபை தேர்தல் நடந்தது.

    200 தொகுதிகள் கொண்ட அம்மாநிலத்தில் தேர்தல் நடப்பதற்கு சில தினங்களுக்கு முன்பு ராம்கர் தொகுதி பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் லட்சுமண் சிங் திடீரென மரணம் அடைந்தார். இதனால் அந்த தொகுதியில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.

    ராம்கர் தொகுதிக்கு கடந்த திங்கட்கிழமை தேர்தல் நடத்தப்பட்டது. இந்த தேர்தலில் காங்கிரஸ் சார்பில் சாபீயாசுபைர் வேட்பாளராக நிறுத்தப்பட்டார். பா.ஜனதா சார்பில் சுக்வந்த்சிங் போட்டியிட்டார்.

    பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் முன்னாள் மத்திய மந்திரி நட்வர்சிங்கின் மகன் ஜெகத்சிங் களத்தில் இறக்கப்பட்டார். இதனால் அந்த தொகுதியில் மும்முனை போட்டி ஏற்பட்டது. திங்கட்கிழமை நடந்த ஓட்டுப் பதிவில் சுமார் 79 சதவீதம் வாக்குகள் பதிவானது.

    இன்று காலை ராம்கர் தொகுதி வாக்குகள் எண்ணப்பட்டன. ஓட்டு எண்ணிக்கையின் தொடக்கத்தில் இருந்தே காங்கிரஸ் வேட்பாளர் சாபீயாசுபைர் அதிக வாக்குகள் பெற்று முன்னணியில் இருந்தார்.

    10 சுற்று வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்டபோது அவர் சுமார் 13 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்று இருந்தார். இதனால் ராம்கர் தொகுதியில் காங்கிரஸ் வெற்றி பெறுவது பிரகாசமானது. இறுதியில் சுமார் 12 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


    ராம்கர் தொகுதியில் 2013-ம் ஆண்டு நடந்த தேர்தலில் பா.ஜனதா கட்சி வெற்றி பெற்று இருந்தது. தற்போது இந்த தொகுதியையும் காங்கிரசிடம் பா.ஜனதா பறி கொடுத்து உள்ளது.

    பா.ஜ.க. வேட்பாளரால் 2-வது இடத்தைதான் பிடிக்க முடிந்தது. பகுஜன் சமாஜ் கட்சி 3-வது இடத்துக்கு தள்ளப்பட்டது.

    ராஜஸ்தான் மாநிலத்தில் மொத்தம் உள்ள 200 தொகுதிகளில் கடந்த டிசம்பர் மாதம் 199 தொகுதிக்குதான் தேர்தல் நடந்தது. இதில் 99 இடங்களை காங்கிரஸ் கைப்பற்றி ஆட்சியை பிடித்தது.

    ஆளும் கட்சியாக இருந்த பா.ஜனதா 73 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று ஆட்சியை பறிகொடுத்தது. தற்போது ராம்கர் தொகுதி காங்கிரஸ் வசம் ஆகியிருப்பதால் சட்டசபையில் அந்த கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கை 100 ஆக உயர்ந்துள்ளது.

    ராஜஸ்தானில் ஒரு கட்சி தனித்து ஆட்சி அமைக்க வேண்டுமானால் 101 இடங்கள் தேவை. அதை காங்கிரஸ் சுயேட்சையின் உதவியுடன் நிறைவு செய்துள்ளது.

    கடந்த டிசம்பர் மாதம் தேர்தல் முடிந்தபோது ஆட்சி அமைப்பதற்கு பகுஜன் சமாஜ், லோக் தளம் ஆகிய கட்சிகளை காங்கிரஸ் சார்ந்து இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. தற்போது ராம்நகர் தொகுதி வெற்றி மூலம் பகுஜன் சமாஜ் கட்சியை காங்கிரஸ் கண்டு கொள்ள வேண்டியது இல்லை என்ற நிலைக்கு உயர்ந்துள்ளது. #Congress #RamgarhElection
    Next Story
    ×