search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தை ‘குறி’ வைக்கும் மோடி-அமித்ஷா
    X

    பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தை ‘குறி’ வைக்கும் மோடி-அமித்ஷா

    தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளில் ஒவ்வொரு தலைவருக்கும் 4 அல்லது 5 தொகுதிகளை ஒதுக்கி, தொண்டர்களை தயார்படுத்த பிரதமர் மோடி, அமித்ஷா வியூகம் வகுத்துள்ளனர். #Parliamentelection #BJP #Modi #AmitShah
    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலுக்கு 534 தொகுதிகளிலும் உள்ள தொண்டர்களை தயார்படுத்தும் நடவடிக்கையை ஆளும் பா.ஜனதா கட்சி தொடங்கி உள்ளது.

    தொகுதி பங்கீடு நடத்தி முடிக்கப்பட்டதும், பா.ஜனதா வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகளில் எத்தகைய தேர்தல் பிரசாரத்தை மேற்கொள்ள வேண்டும், வாக்காளர்களிடம் பிரதமர் மோடியின் 5 ஆண்டு சாதனைகளை எவ்வாறு பட்டியலிட்டு சொல்ல வேண்டும் என்பன போன்றவற்றில் பா.ஜனதாவின் ஒவ்வொரு அடித்தள தொண்டனுக்கும் பயிற்சி அளிக்க பா.ஜனதா முடிவு செய்துள்ளது.



    இந்த திட்டத்தின்படி இந்தியா முழுவதும் ஒவ்வொரு தொகுதியிலும் உள்ள பூத் கமிட்டி உறுப்பினர்கள் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அடுத்த கட்டமாக இந்த பூத் கமிட்டி உறுப்பினர்கள், பா.ஜனதா நிர்வாகிகள் கலந்துகொள்ளும் கூட்டங்களில் பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த கூட்டங்களில் பிரதமர் மோடி, தேசியத் தலைவர் அமித்ஷா, நிர்மலா சீதாராமன் மற்றும் மூத்த தலைவர்கள் கலந்துகொண்டு பா.ஜனதா தொண்டர்களை உற்சாகப்படுத்த உள்ளனர்.

    தமிழ்நாட்டில் உள்ள 39 பாராளுமன்ற தொகுதிகளிலும் இந்த கூட்டம் நடத்தப்பட உள்ளது. இதற்காக அடுத்த மாதம் (பிப்ரவரி) பா.ஜனதா மூத்த தலைவர்கள் தமிழ்நாட்டுக்கு படையெடுத்து வர உள்ளனர். அவர்களது பயணத் திட்டங்களுக்கு இறுதி வடிவம் கொடுக்கப்பட்டு வருகிறது.

    தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளில் ஒவ்வொரு தலைவருக்கும் 4 அல்லது 5 தொகுதிகளை ஒதுக்கி, தொண்டர்களை தயார்படுத்த வியூகம் வகுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு தலைவரும் குறைந்தபட்சம் 6 ஆயிரம் பூத் மட்ட கமிட்டி உறுப்பினர்களை சந்தித்து பேசும் வகையில் இந்த கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக தமிழக பா.ஜனதா மாநில செயலாளர் புரட்சி கவிதாசன் தெரிவித்தார்.

    இந்த திட்டத்தின்கீழ் பிரதமர் மோடி, அமித்ஷா, உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத், மத்திய மந்திரிகள் நிர்மலா சீதாராமன், நிதின்கட்காரி, ரவிசங்கர் பிரசாத் ஆகியோர் தமிழகம் வர உள்ளனர். பிரதமர் மோடி பிப்ரவரி 10 மற்றும் 19-ந்தேதிகளில் தமிழகம் வந்து பொதுக் கூட்டங்களில் பேசுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

    உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்துக்கு தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய 4 பாராளுமன்ற தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அவர் வருகிற 12-ந்தேதி இந்த தொகுதிகளில் சுற்றுப்பயணம் செய்து பா.ஜனதா தொண்டர்களை சந்தித்து பேச உள்ளார்.

    மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத்துக்கு மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா ஈரோடு, சேலம், நாமக்கல் ஆகிய கொங்கு மண்டல தொகுதிகளை குறி வைத்துள்ளார்.

    மத்திய பாதுகாப்பு மந்திரி நிர்மலா சீதாராமன், சாலை போக்குவரத்து மந்திரி நிதின் கட்காரி ஆகியோருக்கு டெல்டா மாவட்டங்களும், வட மாவட்டங்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இவர்கள் தவிர மேலும் சில பா.ஜனதா மூத்த தலைவர்களும் அடுத்த மாதம் அடுத்தடுத்து தமிழகம் வர உள்ளனர்.

    இதனால் 39 எம்.பி. தொகுதிகளிலும் பா.ஜனதா தொண்டர்களை தேர்தலுக்கு தயார்படுத்தும் நடவடிக்கைகளை பா.ஜனதா மேலிடம் செய்து முடிக்க உள்ளது. அதன்பிறகு அவர்கள் மூலம் 39 தொகுதிகளிலும் பிரசாரத்தை தீவிரப்படுத்த திட்டமிட்டுள்ளனர்.

    கூட்டணி உடன்பாடு முடிவடைந்து தொகுதிகள் தெரிய வந்த பிறகு அந்த தொகுதிகளில் அதிகபட்ச பிரசாரத்தை மேற்கொள்ளவும் பா.ஜனதா மேலிட தலைவர்கள் வியூகம் வகுத்துள்ளனர்.

    பா.ஜனதா மூத்த தலைவர்கள் அணிவகுத்து வருவதால் தமிழகத்தில் பா.ஜனதாவுக்கு உள்ள ஆதரவை அதிகரிக்க செய்ய முடியும் என்று நம்புகிறார்கள். #Parliamentelection #BJP #Modi #AmitShah

    Next Story
    ×