search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உத்தரபிரதேசத்தில் 600 கி.மீ. தூரத்துக்கு, உலகின் மிக நீளமான எக்ஸ்பிரஸ் சாலை
    X

    உத்தரபிரதேசத்தில் 600 கி.மீ. தூரத்துக்கு, உலகின் மிக நீளமான எக்ஸ்பிரஸ் சாலை

    உத்தரபிரதேசத்தில் 600 கி.மீ. தூரத்துக்கு உலகின் மிக நீளமான எக்ஸ்பிரஸ் சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டது. #GangaExpressway
    லக்னோ:

    உத்தரபிரதேச மாநிலத்தில் கும்பமேளா நடைபெற்று வருகிறது. நாடு முழுவதும் இருந்து திரளும் மக்கள் அலகாபாத்தில் கங்கை நதியில் புனித நீராடி வருகிறார்கள்.

    இந்த நிலையில் உத்தரபிரதேச மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் மற்றும் அவரது அமைச்சரவையில் உள்ள மூத்த மந்திரிகள் பலர் நேற்று புனித நீராடினார்கள். அதன் பின்னர் மந்திரி சபை கூட்டம் நடந்தது.

    கூட்டத்துக்கு முதல்- மந்திரி யோகி ஆதித்யநாத் தலைமை தாங்கினார். அப்போது உத்தரபிரதேசத்தில் 600 கி.மீ. தூரத்துக்கு உலகின் மிக நீளமான ‘எக்ஸ்பிரஸ் சாலை’ அமைக்க முடிவு செய்யப்பட்டது.

    இந்த சாலை ரூ.36 ஆயிரம் கோடி செலவில் அமைக்கப்பட உள்ளது. இதற்காக கங்கா எக்ஸ்பிரஸ் சாலை என பெயரிடப்பட்டுள்ளது. அதற்காக 6,556 ஹெக்டேர் நிலம் தேவைப்படுகிறது. மீரட்டில் இருந்து அம்ரோகா புலந்த்சார், பதான், ஷாஜன்பூர், பரூகாபாத், ஹர்தோய், கன்னோஜ், உன்னானோ, ரேபரேலி வழியாக அலகாபாத்தை அடைகிறது.

    இந்த தகவலை முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் தெரிவித்தார். மேலும் பந்தல்சந்த் எக்ஸ்பிரஸ் சாலைக்கும் மந்திரி சபையில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இத்திட்டம் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.

    296 கி.மீ. தூரத்துக்கு அமைக்கப்படும் இந்த சாலை அமைக்க ரூ.8,864 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கு3,641 ஹெக்டேர் நிலம் தேவைப்படுகிறது. 91 கி.மீ. தூரத்துக்கு கோரக்பூர் இணைப்பு சாலை திட்டமும் செயல்படுத்தப்படுகிறது. பூர்வாஞ்சல் எக்ஸ்பிரஸ் சாலை எனப்படும் இந்த ரோடு அசம்கார், மற்றும் அம்பேத்கர் நகர் வழியாக செல்கிறது. #GangaExpressway
    Next Story
    ×