search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மேகதாது விவகாரத்தில் கர்நாடகா கூறுவது அப்பட்டமான பொய் - சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனுதாக்கல்
    X

    மேகதாது விவகாரத்தில் கர்நாடகா கூறுவது அப்பட்டமான பொய் - சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனுதாக்கல்

    மேகதாது விவகாரத்தில் கர்நாடக அரசு தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் கூறப்பட்டவை அப்பட்டமான பொய் என தமிழக அரசு தரப்பில் எதிர் பதில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. #MekedatuDam #SC
    புதுடெல்லி:

    காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்னும் இடத்தில் அணை கட்ட கர்நாடக அரசு முடிவு செய்தது. மேகதாதுவில் அணை திட்ட சாத்தியக்கூறு அறிக்கைக்கு மத்திய நீர்வள ஆணையம் ஒப்புதல் அளித்தது.

    இதை எதிர்த்து தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தது. இந்த மனு மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் டிசம்பர் 12-ந் தேதி விசாரணைக்கு வந்தபோது 4 வாரத்தில் பதில் அளிக்க மத்திய அரசுக்கும், கர்நாடக அரசுக்கும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    அதன்படி கர்நாடக அரசு தாக்கல் செய்த பதில் மனுவில், மேகதாது அணைத்திட்டம் செயல்படுத்தப்பட்டால் தமிழகத்துக்கு எந்த வகையில் காவிரியில் இருந்து நீர் குறையும் என்பதை ஆதாரத்துடன் நிரூபிக்க முடியாமல் ஊகத்தில் மட்டுமே இந்த மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது என்றும் கூறப்பட்டது.

    மத்திய அரசு தாக்கல் செய்த பதில் மனுவில், தமிழக அரசு ஊகத்தின் அடிப்படையில் மனுதாக்கல் செய்துள்ளதாகவும், அந்த மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

    இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் ஏ.எம்.கன்வில்கர் தலைமையிலான அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. கர்நாடக அரசு தரப்பில் அரசு வக்கீல் ஆஜராகி, கர்நாடக அரசு வரைவு செயல்திட்டத்தை அனைத்து விவரங்களுடன் மத்திய அரசுக்கு தாக்கல் செய்து உள்ளது. அது தொடர்பான பிரமாண பத்திரத்தை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்திருக்கிறது. எனவே தமிழக அரசின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

    இதற்கு தமிழக அரசு தரப்பில், கர்நாடக அரசு தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தின் மீது பதில் மனுதாக்கல் செய்ய 4 வாரகால அவகாசம் தேவை என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. அதே போல மத்திய அரசும் அவகாசம் கேட்டு கோரிக்கை வைத்தது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் தமிழக அரசு, மத்திய அரசுக்கு 4 வார கால அவகாசம் அனுமதித்து வழக்கை ஒத்திவைத்து உத்தரவு பிறப்பித்தனர்.

    இதற்கிடையில் நேற்று பிற்பகல் கர்நாடக அரசின் பதில் மனு மீது தமிழக அரசு தரப்பில் நேற்று எதிர் பதில் மனுதாக்கல் செய்யப்பட்டது. அதில் கூறியிருப்பதாவது:-

    காவிரி மேலாண்மை ஆணையத்தின் அனுமதி பெறாமல் மேகதாதுவில் அணை கட்டுவது தொடர்பாக மத்திய அரசுக்கு வரைவு செயல்திட்டத்தை கர்நாடக அரசு தாக்கல் செய்து இருப்பது காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக காவிரி நடுவர் மன்றம் மற்றும் சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவுக்கு எதிரானது.

    கர்நாடக அரசு மேகதாது தொடர்பான சாத்தியக்கூறு அறிக்கையில், இரு மாநிலங்களுக்கும் தண்ணீர் தேவையான அளவில் பங்கீடு செய்து கொள்வதற்கே இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது என்று கூறியுள்ளது அப்பட்டமான பொய். பெருமளவு தண்ணீரை தங்கள் பக்கத்தில் தேக்கி வைத்து கொள்வதற்கான முயற்சியாகவே இந்த திட்டத்தை செயல்படுத்த கர்நாடக அரசு முயற்சிக்கிறது. இது காவிரி நடுவர் மன்றம் மற்றும் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை அவமதிக்கும் செயலாகும். எனவே தமிழக அரசின் மனுவை ஏற்றுக் கொண்டு கர்நாடக அரசு மீது கோர்ட்டு அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    அதேபோல் மத்திய அரசு தாக்கல் செய்த பதில் மனுவில் கூறப்பட்டுள்ள அனைத்தையும் மறுத்து தமிழக அரசு தரப்பில் மற்றொரு எதிர் பதில் மனு நேற்று தாக்கல் செய்யப்பட்டது. #MekedatuDam #SC

    Next Story
    ×