search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாத சம்பளதாரர்களின் சிறு தவறுக்கும் நோட்டீசா? வருமான வரித்துறை விளக்கம்
    X

    மாத சம்பளதாரர்களின் சிறு தவறுக்கும் நோட்டீசா? வருமான வரித்துறை விளக்கம்

    மாத சம்பளதாரர்கள் உள்ளிட்ட வரி செலுத்துவோர், கணக்கு தாக்கலின்போது செய்த சிறுசிறு தவறுகளுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியது தொடர்பாக விளக்கம் அளித்துள்ளது. #CBDT #TDS #Notice #IncomeTax
    புதுடெல்லி:

    மாத சம்பளதாரர்கள் உள்ளிட்ட வரி செலுத்துவோர், கணக்கு தாக்கலின்போது செய்த சிறுசிறு தவறுகளுக்கு கூட ஒட்டுமொத்தமாக வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பி வருவதாக தகவல்கள் வெளியாகின. இதற்கு வருமான வரித்துறையை நிர்வகிக்கும் மத்திய நேரடி வரிகள் வாரியம் நேற்று விளக்கம் அளித்தது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    வருமான வரிக்காக ஊழியர்களிடம் சம்பளத்தில் பிடித்தம் செய்யும் நிறுவனங்கள், அந்த வரியை உரிய நேரத்தில் வருமான வரித்துறையிடம் செலுத்தாமல் இருப்பது குற்றம் ஆகும். இந்த குற்றத்தில் ஈடுபட்ட சுயநல நிறுவனங்கள், தங்கள் மீதான நடவடிக்கையை தடுப்பதற்காக திட்டமிட்டு இத்தகைய வதந்திகளை பரப்பி வருகின்றன.

    ரூ.5 லட்சத்துக்கு மேல், வரி பிடித்தம் செய்யப்பட்டு, அது வருமான வரித்துறையிடம் ஒப்படைக்காத நிறுவனங்களுக்கு மட்டுமே நோட்டீஸ் அனுப்பப்பட்டு வருகிறது. குறிப்பாக, மும்பையில் உள்ள வருமான வரி டி.டி.எஸ். அலுவலகம் கடந்த ஒரு மாதத்தில் பெரிய அளவிலான 50 வரி ஏய்ப்புகளுக்கு மட்டுமே நோட்டீஸ் அனுப்பி உள்ளது. அவை எல்லாமே ரூ.5 லட்சத்துக்கு மேல் பிடித்தம் செய்யப்பட்ட வரியை செலுத்தாதது தொடர்பானவை.

    இதுதவிர, ரூ.50 கோடிக்கு மேல் பிடித்தம் செய்யப்பட்ட வரியை செலுத்தாத 4 பெரிய நிறுவனங்கள் மீது நடவடிக்கையை தொடங்கி உள்ளோம். இப்படி வரியை செலுத்தாமல் இருப்பது, சம்பந்தப்பட்ட ஊழியர்களின் நலன்களையும் பாதிக்கும். எனவே, இத்தகைய சட்டரீதியான நடவடிக்கையை கூட மாத சம்பளதாரர்களை துன்புறுத்தும் நடவடிக்கை என்று திசைதிருப்ப முயல்வது துரதிருஷ்டவசமானது.

    சுமார் 6 கோடி கணக்குகள் தாக்கல் செய்யப்படும் நாட்டில், நடப்பு நிதியாண்டில் 1,400 வழக்குகள் மட்டுமே தொடரப்பட்டுள்ளன. எனவே, எப்படி பார்த்தாலும், இதை ஒட்டுமொத்தமாக துன்புறுத்தும் நடவடிக்கையாக கருத முடியாது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #CBDT #TDS #Notice #IncomeTax
    Next Story
    ×