search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் திருட்டு இயந்திரங்கள் - பரூக் அப்துல்லா
    X

    மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் திருட்டு இயந்திரங்கள் - பரூக் அப்துல்லா

    மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை திருட்டு இயந்திரங்கள் என குறிப்பிட்ட காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா அவற்றை ஒழிக்க வேண்டும் என வலியுறுத்தினார். #MamataBanerjee #KolkattaRally #FarooqAbdullah #EVM
    கொல்கத்தா:

    கொல்கத்தாவில் இன்று மம்தா பானர்ஜி தலைமையில் பிரமாண்ட பொதுக்கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், நாடு முழுவதிலும் இருந்து எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்று பேசி வருகின்றனர்.

    இந்த கூட்டத்தில் காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா பேசியதாவது:

    'உண்மையை சொல்லப் போனால் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் எல்லாமே திருட்டு இயந்திரங்கள். உலகில் தற்போது எந்த நாட்டு தேர்தல்களிலும் புழக்கத்தில் இல்லாத இந்த திருட்டு இயந்திரங்களை நமது நாட்டில் இருந்தும் ஒழிக்க வேண்டும்.



    இதுதொடர்பாக, எதிர்க்கட்சி தலைவர்கள் ஜனாதிபதி மற்றும் தலைமை தேர்தல் ஆணையாளரை அணுக வேண்டும், மின்னணு இயந்திர வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு பதிலாக வெளிப்படைத்தன்மை கொண்ட வாக்குச்சீட்டு முறையில் இனி தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் என அவர்கள் வலியுறுத்த வேண்டும்’ என குறிப்பிட்டார்.

    'எந்த தனிமனிதரையும் (மோடி) ஒழிப்பது நமது எண்ணமல்ல. நமது நாட்டை காப்பாற்றுவதும் நமது நாட்டின் விடுதலைக்காக பலர் புரிந்த தியாகங்களை கவுரவிப்பதும்தான் நமது நோக்கமாகும்.

    காஷ்மீரில் தற்போது உருவாகியுள்ள சூழ்நிலைக்கு, மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசு தான் காரணம். மதத்தின் அடிப்படையில் மக்கள் பிளவுப்படுத்தப்படுகிறார்கள். பாகிஸ்தானியர்கள் என்று முத்திரை குத்தப்படுகிறார்கள்.

    ஆனால், அதற்கு நேர்மாறாக அங்குள்ள மக்கள் அனைவரும் இந்தியர்களாக வாழ்வதற்குதான் ஆசைப்படுகிறார்கள். நான் ஒரு முஸ்லிம், ஆனால் எனது தாய்நாடான இந்தியாவை நான் நேசிக்கிறேன்.

    முத்தலாக் தடுப்பு சட்ட மசோதாவுக்காக பாராளுமன்றத்தில் வரிந்துக்கட்டிக் கொண்டு குரல் கொடுத்த பா.ஜ.கவினர் பெண்கள் இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றாமல் இருந்து விட்டனர்.

    பா.ஜ.க. அரசை வெளியேற்ற நாம் அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும். இதற்காக நாம் ஓரணியில் திரண்டு, ஒருமித்த குரலில் போராடுவோம். பிரதமர் யார்? என்பதை தேர்தல் முடிவுக்கு பிறகு தீர்மானித்து கொள்ளலாம். இனி அமையும் புதிய அரசு நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்லும் என்று நான் நம்புகிறேன்’

    இவ்வாறு அவர் பேசினார். #MamataBanerjee #KolkattaRally #FarooqAbdullah #EVM 
    Next Story
    ×