search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மம்தா தலைமையில் அணிதிரண்ட எதிர்க்கட்சிகள்- கொல்கத்தாவில் பொதுக்கூட்டம் தொடங்கியது
    X

    மம்தா தலைமையில் அணிதிரண்ட எதிர்க்கட்சிகள்- கொல்கத்தாவில் பொதுக்கூட்டம் தொடங்கியது

    கொல்கத்தாவில் இன்று மம்தா பானர்ஜி தலைமையில் பிரமாண்ட பொதுக்கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், நாடு முழுவதிலும் இருந்து எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். #MamataBanerjee #Megarally
    கொல்கத்தா:

    பாராளுமன்றத் தேர்தலில் பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. காங்கிரஸ் தலைமையில் மத்தியில் வலுவான கூட்டணி அமைக்க தீவிர முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மாநில சட்டசபை தேர்தலில் பா.ஜனதாவிடம் இருந்து ஆட்சியை தட்டிப்பறித்த காங்கிரஸ், அதே போன்று பாராளுமன்ற தேர்தலிலும் வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கையுடன் உள்ளது.

    என்றாலும் பெரும்பாலான மாநிலங்களில் மாநில கட்சிகளே மிகுந்த செல்வாக்குடன் இருப்பதால், அத்தகைய மாநில கட்சிகளை ஒருங்கிணைத்து மெகா கூட்டணியை உருவாக்க காங்கிரஸ் முயற்சி செய்தது. ஆனால் காங்கிரஸ் தலைமையின் கீழ் மாநில கட்சிகள் ஒருங்கிணையும் திட்டத்தை பெரும்பாலான மாநில கட்சிகள் ஏற்கவில்லை.

    பா.ஜனதா கூட்டணியில் இருந்து விலகி, பா.ஜனதாவை வீழ்த்தியே தீர வேண்டும் என்ற கோபத்தில் இருக்கும் ஆந்திர முதல்-மந்திரி சந்திர பாபு நாயுடுவும் மெகா கூட்டணியை உருவாக்கும் முயற்சிகளில் ஈடுபட்டார். அதேசமயம் பாஜக, காங்கிரஸ் அல்லாத கூட்டணி அமைக்க தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் முயற்சி செய்து வருகிறார்.

    இந்த சூழ்நிலையில் பா. ஜனதாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒன்று திரட்டும் முயற்சியில் மேற்கு வங்க முதல்-மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி களத்தில் தீவிரமாக இறங்கியுள்ளார். மேற்கு வங்க மாநில தலைநகர் கொல்கத்தாவில் பா.ஜனதாவை எதிர்க்கும் கட்சித் தலைவர்களின் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெறும் என்று அறிவித்தார்.  இதற்காக நாடு முழுவதும் 25-க்கும் மேற்பட்ட கட்சிகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்தார். இதனை ஏற்று பல்வேறு தலைவர்கள் கொல்கத்தா வந்துள்ளனர்.


    அதன்படி, கொல்கத்தாவில் உள்ள பிரிகேட் பரேட் மைதானத்தில் இன்று மதியம் பிரமாண்ட பொதுக்கூட்டம் தொடங்கியது. மம்தா தலைமையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் சரத் பவார், தேவேகவுடா,  மல்லிகார்ஜூன கார்கே, சந்திரபாபு நாயுடு,  குமாரசாமி,  அரவிந்த் கெஜ்ரிவால்,  பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா,  மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.

    பா.ஜனதா அதிருப்தி தலைவர்கள் யஷ்வந்த் சின்கா, சத்ருகன் சின்கா, அருண்ஷோரி, ராம்ஜெத் மலானி ஆகியோரும் இந்த கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

    தலைவர்கள் பேசுவதற்காக பிரம்மாண்டமான மேடை அமைக்கப்பட்டுள்ளது. தொண்டர்கள் அனைவருக்கும் பொதுக்கூட்ட நிகழ்ச்சிகள் சென்று சேரும் வகையில் ஆங்காங்கே எல்.இ.டி தொலைக்காட்சித் திரைகள் அமைக்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு பணிகளுக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.


    இன்றைய கூட்டத்தில் பங்கேற்றுள்ள அனைத்து தலைவர்களுக்கும் பேச வாய்ப்பு வழங்கப்படும்.  இதைத் தொடர்ந்து தலைவர்கள் சில முக்கிய தீர்மானங்களை நிறைவேற்றுவார்கள் என்று தெரிகிறது. இது தவிர எதிர்க்கட்சி தலைவர்கள் தங்களுக்குள் பேசி ஒருமித்த கருத்துக்கு வர உள்ளனர்.  இன்றைய கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளில் ஒருமித்த கருத்து உருவாகாவிட்டால் பாஜகவுக்கு எதிரான மெகா கூட்டணி என்பது கைகூடாமல் போக வாய்ப்புள்ளது. ஆனால் இந்த வாய்ப்பை நழுவ விடக்கூடாது என்பதில் மம்தா பானர்ஜி தீவிரமாக உள்ளார். #MamataBanerjee #Megarally
    Next Story
    ×