search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஐ.எஸ். ஆதரவு பயங்கரவாதிகள் பற்றி புதிய தகவல் - உத்தரபிரதேசம், பஞ்சாப்பில் என்.ஐ.ஏ. மீண்டும் சோதனை
    X

    ஐ.எஸ். ஆதரவு பயங்கரவாதிகள் பற்றி புதிய தகவல் - உத்தரபிரதேசம், பஞ்சாப்பில் என்.ஐ.ஏ. மீண்டும் சோதனை

    ஐ.எஸ். ஆதரவு பயங்கரவாதிகள் பற்றி புதிய தகவல்கள் கிடைத்ததால், உத்தரபிரதேசம், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் 8 இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பு மீண்டும் சோதனை நடத்தியது. இதில் 3 பேர் பிடிபட்டனர். #NIA #ISIS #Punjab
    புதுடெல்லி:

    சர்வதேச பயங்கரவாத அமைப்பான ஐ.எஸ். செயல்பாடுகளால் ஈர்க்கப்பட்ட சிலர், அதே பாணியில் ‘ஹர்கத் உல் ஹர் இ இஸ்லாம்’ என்ற பயங்கரவாத அமைப்பை உருவாக்கி இருப்பதாக தேசிய புலனாய்வு அமைப்புக்கு (என்.ஐ.ஏ.) தகவல் கிடைத்தது.

    இதையடுத்து, கடந்த மாதம் டெல்லி, உத்தரபிரதேசம் போன்ற மாநிலங்களில் 17 இடங்களில் என்.ஐ.ஏ. அதிரடி சோதனை நடத்தியது. அதில், 12 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர்.

    அவர்களிடம் இருந்து ராக்கெட் லாஞ்சர், 25 கிலோ வெடி மருந்துகள், தற்கொலைப்படை உடைக்கான மூலப்பொருட்கள், டைம்-பாம் குண்டு தயாரிக்க பயன்படும் 112 அலாரம் கெடிகாரங்கள், 91 செல்போன்கள், 134 சிம்கார்டுகள், 3 லேப்டாப்புகள், கத்தி உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன. இந்த கும்பல், ரிமோட் கண்ட்ரோல் கார்களை கூட வாங்கி இருப்பது தெரியவந்தது.

    டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் குண்டுகளை வெடிக்கச் செய்வதற்கும், அரசியல் தலைவர்களை குறிவைத்து தற்கொலை தாக்குதல் நடத்துவதற்கும் அவர்கள் சதித்திட்டம் தீட்டியது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதற்கிடையே, பிடிபட்ட பயங்கரவாதிகளிடம் என்.ஐ.ஏ. நடத்திய விசாரணையில் புதிய திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. மேலும், குடியரசு தின கொண்டாட்டத்தை சீர்குலைக்கும் வகையில் டெல்லியில் தாக்குதல் நடத்த சில தேசவிரோத சக்திகள் முயன்று வருவதாக உளவுத்துறை தகவல்கள் கிடைத்தன.

    அவற்றின் அடிப்படையில், உத்தரபிரதேசம், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் 8 இடங்களில் நேற்று என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இதில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது.

     இந்த சோதனையின்போது, உத்தரபிரதேச மாநிலம் ஹாபுர் பகுதியில் 3 இளைஞர்கள் பிடிபட்டனர். அவர்கள் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டனர்.

    அத்துடன், மீரட் அருகே ராதானா கிராமத்தில் ஒரு மதகுரு இல்லத்தில் நடந்த சோதனையில் ரகசிய ஆவணங்கள் சிக்கின. அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 
    Next Story
    ×