search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கேரளாவில் புகழ்பெற்ற பத்மநாபசுவாமி கோவிலில் பிரதமர் மோடி வழிபாடு
    X

    கேரளாவில் புகழ்பெற்ற பத்மநாபசுவாமி கோவிலில் பிரதமர் மோடி வழிபாடு

    கேரளாவில் புகழ்பெற்ற பத்மநாபசுவாமி கோவிலில் பிரதமர் மோடி வழிபட்டார். அப்போது கோவிலில் ரூ.92.22 கோடி மதிப்பிலான திட்டங்களையும் அவர் தொடங்கி வைத்தார். #PMModi #PadmanabhaswamyTemple
    திருவனந்தபுரம்:

    கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில், புகழ்பெற்ற பத்மநாபசுவாமி கோவில் உள்ளது. விஷ்ணு பகவானின் 108 திவ்யதேசங்களில் ஒன்றாக கருதப்படும் இந்த கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

    இந்த நிலையில் மாநிலத்தில் பல்வேறு வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் கேரளா வந்தார். அவர் கொல்லத்தில் 13 கி.மீ. தூரத்துக்கு அமைக்கப்பட்டு உள்ள புறவழிச்சாலையை திறந்து வைத்தார்.



    அதைத்தொடர்ந்து அவர் பத்மநாபசுவாமி கோவிலுக்கு சென்றார். அங்கு மத்திய அரசின் சுவதேஷ் தரிசன் திட்டத்தின் கீழ் ரூ.92.22 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்பட்டு உள்ள வளர்ச்சி திட்டங்களை அவர் தொடங்கி வைத்தார். பின்னர் கோவிலுக்குள் சென்று வழிபாடு செய்தார். சுமார் 20 நிமிடம் அங்கே அவர் செலவிட்டார்.

    பிரதமர் மோடியுடன் மாநில முதல்-மந்திரி பினராயி விஜயன், கவர்னர் சதாசிவம், மத்திய மந்திரி அல்போன்ஸ் கன்னன்தானம், திருவனந்தபுரம் எம்.பி. சசிதரூர் உள்பட பலர் சென்றனர். அத்துடன் கேரள பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் டெல்லி திரும்பினார்.

    முன்னதாக கொல்லத்தில் புறவழிச்சாலையை திறந்து வைத்து பேசிய பிரதமர் மோடி, சபரிமலை விவகாரத்தில் மாநில அரசையும், காங்கிரஸ் கட்சியையும் கடுமையாக சாடினார். இது குறித்து அவர் கூறுகையில், ‘கடந்த சில மாதங்களாக ஒட்டுமொத்த நாடும் சபரிமலை பற்றித்தான் பேசி வருகிறது. சபரிமலை விவகாரத்தை ஆளும் இடதுசாரி முன்னணி அரசு கையாளும் முறையானது, வரலாற்றிலேயே எந்த ஒரு அரசோ, கட்சியோ செய்திராத மிகவும் வெட்கக்கேடான செயல் ஆகும்’ என குற்றம் சாட்டினார்.

    அவர் மேலும் கூறும்போது, ‘இந்திய வரலாறு, கலாசாரம் மற்றும் ஆன்மிகத்தை கம்யூனிஸ்டுகள் மதிக்கமாட்டார் கள் என்பது நமக்கு தெரியும். ஆனாலும் இத்தகைய வெறுப்பு செயலானது யாரும் கற்பனை செய்திட முடியாதது. இதைப்போல காங்கிரஸ் கட்சியும் சபரிமலை விவகாரத்தில் இரட்டை நிலையை கொண்டிருக்கிறது. அந்தவகையில் கம்யூனிஸ்டுகளும், காங்கிரசும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள்தான்’ எனவும் குறிப்பிட்டார்.

    பிரதமர் மோடியின் இந்த குற்றச்சாட்டுக்கு கம்யூனிஸ்டு மற்றும் காங்கிரஸ் கட்சிகள் கண்டனம் தெரிவித்து உள்ளன. சபரிமலை விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை அமல்படுத்துவதற்கு மோடி கண்டனம் தெரிவித்திருப்பது வெட்கக்கேடானது என கம்யூனிஸ்டு கட்சி கூறியுள்ளது.

    இதைப்போல சபரிமலை விவகாரத்தை அரசியல் வாய்ப்பாக பா.ஜனதா பயன்படுத்துவதையே பிரதமரின் பேச்சு எடுத்துரைப்பதாக காங்கிரஸ் கட்சியும் கூறியுள்ளது.
    Next Story
    ×