search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முதல்முறை வாக்காளர்களுக்கு முன்னுரிமை கொடுங்கள் - தமிழக பாஜகவினருக்கு மோடி அறிவுரை
    X

    முதல்முறை வாக்காளர்களுக்கு முன்னுரிமை கொடுங்கள் - தமிழக பாஜகவினருக்கு மோடி அறிவுரை

    எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் முதல்முறை வாக்காளர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என தமிழக பாஜகவினரை பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார். #firsttimevoters #Modi #Bjp #TNBjp
    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருப்பதால் பிரதமர் நரேந்திர மோடி மாநிலவாரியாக சில பாராளுமன்ற தொகுதிகளில் உள்ள பாஜக வாக்குச்சாவடி முகவர்களுடன் காணொலி மூலம் கலந்துரையாடி வருகிறார்.

    அவ்வகையில் இன்று தமிழகத்தின் மயிலாடுதுறை, பெரம்பலூர், சிவகங்கை, தேனி, விருதுநகர் ஆகிய 5 தொகுதிகளை சேர்ந்த  பூத் வாக்குச்சாவடி முகவர்களுடன் நேரலையாக பேசினார். இன்றைய கலந்துரையாடலில் தேசிய செயலாளர் எச்.ராஜாவும் பங்கேற்றார்.

    இவர்களுடன் பேசிய மோடி, எதிர்க்கட்சியினர் ஏகப்பட்ட குழப்பத்தில் இருப்பதாக தெரிவித்தார். மோடியை பற்றி தவறாக கூற ஏதும் கிடைக்காததால் இதற்கு முன்னர் எதிரியாக இருந்த கட்சியுடன் சிலர் கூட்டணி அமைப்பதாவும் அவர் குறிப்பிட்டார்.

    மோடி கெட்டவனாக இருந்து நமது அரசு செயல்படாமல் இருந்தால் இப்படிப்பட்ட பொருந்தாத கூட்டணியை அவர்கள் எதற்காக தேடிப்போக வேண்டும்? எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.

    தொடர்ந்து மோடி பேசியதாவது:-


    ஒருபக்கத்தில் வளர்ச்சி என்னும் குறிக்கோளுடன் நாமும் மறுபுறத்தில் சந்தர்ப்பவாத கூட்டணியும், பரம்பரை கட்சிகளும் அணி திரண்டு நிற்கின்றன. மற்ற கட்சிகளைப்போல் ஓட்டு வங்கியை உருவாக்குவதற்காக நாம் பிரித்தாளும் அரசியலை நடத்தவில்லை. ஒவ்வொரு வகையிலும் இந்த நாட்டுக்காக சேவை செய்ய நாம் இருக்கிறோம்.

    அவர்கள் தங்களுக்கென்று சொந்த சாம்ராஜ்ஜியம் அமைக்க வேண்டும் என்கிறார்கள். நாம் மக்களுக்கு அதிகாரமளிக்க வேண்டும் என விரும்புகிறோம். பாஜகவுக்கு எதிராக அமையும் எந்த கூட்டணியும் நிலைக்காது. அது சுயநலத்துக்கான குறுகியகால கூட்டணியாக முடிந்துப் போகும்.

    இளைஞர்கள், பெண்கள், விவசாயிகள் என அனைத்து தரப்பினரும் பாஜகவுடன் இணைந்து இருக்கின்றனர்.

    வரும் தேர்தலில் முதன்முறை வாக்காளர்களுக்கு முக்கியத்துவம்  அளித்து அவர்களின் வாக்குகளை நாம் பெற முயற்சிக்க வேண்டும். ஏனெனில், முதன்முறை வாக்காளர்களுக்கு வாரிசு அரசியல் பிடிக்காது, வளர்ச்சியின்மீது மட்டுமே அவர்களுக்கு அக்கறை.

    முதன்முறை வாக்காளர்களுக்கு வாக்குறுதிகள் மேல் அக்கறையில்லை, செயலாற்றல் மீதுதான் அவர்களுக்கு அக்கறை. வாய்ஜாலம், நாடகம் பற்றி அவர்களுக்கு அக்கறையில்லை, வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுகிறதா? என்பதில்தான் அவர்களின் கவனம் இருக்கும். எனவே, முதன்முறை வாக்காளர்களின் கவனத்தை ஈர்த்து, அவர்களின் வாக்குகளை பாஜகவின் பக்கம் திருப்ப வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார். #firsttimevoters #Modi #Bjp #TNBjp
    Next Story
    ×