search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    10 சதவீத இட ஒதுக்கீடு புதிய இந்தியாவின் நம்பிக்கையை அதிகரிக்கும்- மோடி பேச்சு
    X

    10 சதவீத இட ஒதுக்கீடு புதிய இந்தியாவின் நம்பிக்கையை அதிகரிக்கும்- மோடி பேச்சு

    பொருளாதார ரீதியாக பின்தங்கிய பிரிவினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கியிருப்பது, புதிய இந்தியாவுக்கான நம்பிக்கையை அதிகரிக்கும் என பிரதமர் மோடி பேசினார். #BJPMeeting #Modi
    புதுடெல்லி:

    டெல்லியில் நடைபெற்ற பாஜக தேசிய கவுன்சில் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி இன்று நிறைவுரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

    இந்திய வரலாற்றில் முதல் முறையாக, மத்திய அரசுக்கு எதிராக எந்த ஊழல் குற்றச்சாட்டுகளும் இல்லை. நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்தலாம் என்பதையும், ஊழல் இல்லாமல் அரசு இயங்க முடியும் என்பதையும் பாஜக ஆட்சி நிரூபித்துள்ளது.

    வறுமை காரணமாக வாய்ப்புகள் கிடைக்காத இளைஞர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில், பொருளாதார ரீதியாக பின்தங்கிய வகுப்பினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. கல்வி மற்றும் அரசு வேலைகளில் பொதுப்பிரிவில் உள்ள ஏழை வாலிபர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவது, புதிய இந்தியாவுக்கான நம்பிக்கையை அதிகரிக்கும்.

    முந்தைய அரசுகள் விவசாயிகளை வாக்காளர்களாக மட்டுமே பார்த்தன. நாம் அவர்களின் குறைகளையும் சவால்களையும் களைய முயற்சிக்கிறோம். 2022 ம் ஆண்டிற்குள் விவசாயிகளின் வருவாயை இருமடங்காக உயர்த்துவதற்கு நாம் இரவு பகலாக பணியாற்றுகிறோம். காங்கிரஸ் கட்சி தனது வழக்கறிஞர்கள் மூலம் அயோத்தி வழக்கை முடிக்க முடியாமல் தடுக்கிறது.


    ஆந்திர பிரதேசம், மேற்கு வங்கம் மற்றம் சத்தீஸ்கர் மாநிலங்களில் சிபிஐ நுழைவதற்கு தடை விதித்திருக்கிறார்கள். தவறு செய்துவிட்டு பயப்படுவதால் அவர்கள் இவ்வாறு செய்கிறார்களா? இன்று சிபிஐ அமைப்பை ஏற்க மறுக்கிறார்கள், நாளை மேலும் சில அமைப்புகளை ஏற்க மறுப்பார்கள். ராணுவம், போலீஸ், சுப்ரீம் கோர்ட், தேர்தல் ஆணையம், சிஏஜி என எல்லாம் தவறான அமைப்புகள், தாங்கள் மட்டும் தான் சரியானவர்கள் என நினைக்கிறார்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஒப்பந்த ஊழல் தொடர்பாக பேசிய மோடி,  காவலாளியை தடுத்து நிறுத்த முடியாது என்றும், திருடர்கள் எங்கு இருந்தாலும் அவர்களை காவலாளி தப்ப விட மாட்டான் என்றும் குறிப்பிட்டார். #BJPMeeting #Modi
    Next Story
    ×