search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நிர்மலா சீதாராமனை பெண் என்று பிரித்துப் பேசிய ராகுல் காந்திக்கு மகளிர் ஆணையம் நோட்டீஸ்
    X

    நிர்மலா சீதாராமனை பெண் என்று பிரித்துப் பேசிய ராகுல் காந்திக்கு மகளிர் ஆணையம் நோட்டீஸ்

    ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமனை பாலின பாகுபாடாக 'பெண்' என்று பிரித்துப் பேசிய ராகுல் காந்திக்கு மகளிர் தேசிய மகளிர் ஆணையம் இன்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது. #RahulGandhi #NirmalaSitharaman #NCW
    புதுடெல்லி:

    காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி நேற்று ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடந்த விவசாயிகள் பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றினார்.

    அவர் பேசும்போது ரபேல் போர் விமான விவகாரத்தில் பிரதமர் மோடி பாராளுமன்றத்தில் பதில் சொல்ல மறுக்கிறார். அவர் ஓடி ஒளிகிறார். 56 அங்குலம் மார்பு கொண்ட தைரியமான காவலாளி என்று மோடி தன்னை வர்ணித்துக் கொண்டார்.

    ஆனால், இந்த வி‌ஷயத்தில் பெண்ணான நிர்மலா சீதாராமன் தான் அவரை பாதுகாக்க தேவைப்பட்டார். மோடி நிர்மலா சீதாராமனிடம் சென்று என்னை காப்பாற்றுங்கள். என்னால் என்னை காப்பாற்றிக் கொள்ள முடியவில்லை என்று அவர் உதவியை கேட்கிறார் என ராகுல்காந்தி பேசினார்.

    இதற்கிடையில் நிர்மலா சீதாராமனை பாலின பாகுபாடாக 'பெண்' என்று குறிப்பிட்டு ராகுல்காந்தி கூறிய வார்த்தை சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ஆண், பெண் என்ற பாகுபாட்டுடன் அவர் விமர்சித்திருப்பதாக பல தரப்பில் இருந்தும் குற்றம்சாட்டப்படுகிறது. சமூக வலைத்தளங்களிலும் இதுபற்றி கடுமையான கருத்துகளை பலரும் வெளியிட்டனர்.

    இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் இதுதொடர்பாக கருத்து வெளியிட்டுள்ளார். மேலும் ஆக்ராவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போதும் இதை குறிப்பிட்டு அவர் தனது கருத்தை கூறினார்.



    பாராளுமன்றத்தில் ரபேல் விமானம் தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர்கள் கூறிய குற்றச்சாட்டை நிர்மலா சீதாராமன் உடைத்தெறிந்து உண்மையை வெளிப்படுத்தினார்.

    ஒரு பெண் ராணுவ மந்திரியாக இருக்கும் நிலையில் அவரை ராகுல்காந்தி அவமதித்துள்ளார். இது ஒரு பெண்ணுக்கு ஏற்பட்ட அவமதிப்பு அல்ல. ஒட்டுமொத்த பெண் குலத்தையே அவர் அவமதித்து இருக்கிறார். இதுபோன்ற பொறுப்பற்ற பேச்சுக்கு அவர்கள் விலைகொடுக்க வேண்டிய காலம் வரும்.

    ராணுவ துறைக்கு முதல் முறையாக ஒருபெண் மந்திரியாக இருப்பது பெருமைக்குரிய வி‌ஷயம். பெண்களுக்கு மரியாதை அளிப்பது என்பது வீட்டிலிருந்தே தொடங்குகிறது.

    இவ்வாறு மோடி கூறியிருந்தார்.

    பா.ஜனதா தலைவர் அமித்ஷா கூறும்போது, நிர்மலா சீதாராமன் கூறிய உண்மைகளுக்கு காங்கிரஸ்காரர்களால் பதில் சொல்ல முடியவில்லை. இதனால் இப்போது இதுபோன்ற அவமதிப்பான கருத்துக்களை வெளியிட்டு இருக்கிறார்கள். இதற்காக இந்தியாவின் பெண்கள் சக்தியிடம் அவர்கள் மன்னிப்பு கேட்கவேண்டும் என்று கூறினார்.

    தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவி ரேகா ‌ஷர்மாவும் ராகுல் காந்தியை விமர்சித்து இருக்கிறார். அவர் தனது டுவிட்டர் தளத்தில் கூறும்போது, ராகுல்காந்தி என்ன சொல்ல வருகிறார். பெண்கள் என்றால் பலவீனமானவர்கள் என்று கூறுகிறாரா? இதுபற்றி அவர் விளக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில், இவ்விவகாரம் தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு ராகுல் காந்திக்கு தேசிய மகளிர் ஆணையம் இன்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது. #RahulGandhi #NirmalaSitharaman #NCW
    Next Story
    ×