search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விமான நிலையங்களைப் போல் ரெயில் நிலையங்களிலும் பயணிகளை அனுமதிப்பதில் புதிய முறை
    X

    விமான நிலையங்களைப் போல் ரெயில் நிலையங்களிலும் பயணிகளை அனுமதிப்பதில் புதிய முறை

    விமான நிலையங்களைப் போல் ரெயில் நிலையங்களிலும் பயணிகளை அனுமதிப்பதில் புதிய முறையை அமல்படுத்த ரெயில்வே நிர்வாகம் திட்டமிட்டு உள்ளது. #Railway #Airport #Security
    புதுடெல்லி:

    விமான நிலையங்களைப் போல் ரெயில் நிலையங்களிலும் பயணிகளை அனுமதிப்பதில் புதிய முறையை அமல்படுத்த ரெயில்வே நிர்வாகம் திட்டமிட்டு உள்ளது.

    ரெயில்வே பாதுகாப்பு படையின் இயக்குனர் ஜெனரல் அருண் குமார் டெல்லியில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பிரயாக் ராஜ் (அலகாபாத்) நகரில் இந்த மாதம் தொடங்கும் கும்பமேளா விழாவையொட்டி ரெயில் நிலையத்துக்கு வருவோரிடம் உயர் தொழில்நுட்பத்துடன் கூடிய பாதுகாப்பு சோதனை திட்டம் பரீட்சார்த்த முறையில் நடைமுறைப்படுத்தப்பட்டு இருக்கிறது. கர்நாடக மாநிலம் உப்பள்ளி ரெயில் நிலையத்தில் செயல்படுத்தப்பட உள்ள இந்த திட்டம் நாடு முழுவதும் உள்ள 202 பெரிய ரெயில் நிலையங்களில் நடைமுறைப்படுத்தப்படும்.

    இந்த திட்டத்தின்படி பயணிகள் செல்லும் ரெயில்கள் புறப்படுவதற்கு 15 முதல் 20 நிமிடங்களுக்கு முன்பாக அந்த பகுதியில் உள்ள நுழைவு வாயில் மூடப்படும்.

    மற்ற இடங்களில் உள்ள நுழைவு வாயில்களை ரெயில்வே பாதுகாப்பு படையினர் கையாள்வார்கள். மேலும் தானியங்கி மூடும் கதவுகள் வழியாக குறிப்பிட்ட நேரத்துக்கு பிறகு பயணிகள் நுழைவது தடுக்கப்படும். எனவே பயணிகள் அனைவரும் 15 முதல் 20 நிமிடங்களுக்கு முன்பாகவே ரெயில் நிலையத்துக்கு வந்துவிடவேண்டும். ஒவ்வொரு நுழைவு பகுதிகளிலும் பயணிகளிடம் தோராய முறையில் பாதுகாப்பு சோதனை நடத்தப்படும்.

    2016-ம் ஆண்டு ஒப்புதல் அளிக்கப்பட்ட ஒருங்கிணைந்த பாதுகாப்பு திட்டத்தின் கீழ் இந்த புதிய நடைமுறை 202 ரெயில் நிலையங்களில் செயல்படுத்தப்படும்.

    இத்திட்டத்தில் கண்காணிப்பு கேமராக்கள், நுழைவு கட்டுப்பாடு, பயணிகள் மற்றும் உடைமைகள் சோதனை, வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் அகற்றுதல் போன்றவை அடங்கும். மேலும், பயணிகள் நுழைவு வாயில்கள் வழியாக வருவது முதல் அவர்கள் ரெயில்களில் ஏறும் வரை கண்காணிக்கப்படும். இத்திட்டத்துக்கு ரூ.385 கோடி செலவு பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ரெயில் நிலைய வளாகத்துக்குள் பயணிகள் நுழையும்போதே இந்த சோதனை நடத்தப்பட்டுவிட்டால் பயணிகள் அதிகம் கூடும் நேரங்களில் ஏற்படும் நெருக்கடிகள் தவிர்க்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    விமான நிலையங்களில் பாதுகாப்பு சோதனைக்காக பயணிகள் ஒரு மணி நேரத்துக்கு முன்பாகவே செல்லவேண்டி இருப்பது போன்ற இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் ரெயில்வே நிர்வாகம் தீவிரமாக உள்ளது.  #Railway #Airport #Security 
    Next Story
    ×