search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பசுக்களை பராமரிக்க அரை சதவீதம் செஸ் வரி - உ.பி. அரசின் முடிவுக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம்
    X

    பசுக்களை பராமரிக்க அரை சதவீதம் செஸ் வரி - உ.பி. அரசின் முடிவுக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம்

    உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் தெருக்களில் திரியும் பசுக்களை பராமரிக்க அரை சதவீதம் செஸ் வரி விதிக்கும் அரசின் முடிவுக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. #UPGovt #Gaukalyancess #StrayCattle
    லக்னோ:

    உத்தரப்பிரதேசம் மாநில முதல் மந்திரி யோகி ஆதித்யாநாத் கடந்த மாதம் 27-ம் தேதி அரசு உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

    அப்போது, தெருக்களில் திரியும் பசுக்களுக்கு சிறந்த தங்குமிட வசதிகளை ஏற்படுத்த வேண்டும். இதற்கான பரிந்துரைகளை தலைமைச் செயலாளர் ஒரு வாரத்தில் வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்.

    மேலும், கால்நடைகளுக்கான மேய்ச்சல் நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும். ஆக்கிரமிப்பாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநிலத்தில் உள்ள 750 கோசாலைகளில் பசுக்களுக்கு சரியான உணவு, தொழுவங்கள், குடிநீர் வசதிகள் வழங்கப்பட வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.

    இதற்கு தேவையான செலவினங்களுக்காக சில பொருட்களின் மீது கூடுதலாக அரை சதவீதம் செஸ் வரி விதிக்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. நேற்று நடைபெற்ற மந்திரிசபை கூட்டத்தில் இந்த முடிவுக்கு ஒப்பதல் அளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    எந்த வகை பொருட்களின்மீது கூடுதல் செஸ் வரி விதிப்பது என்பது தொடர்பாக உயரதிகாரிகளுடன் ஆலோசித்து விரைவில் இதுதொடர்பான அரசு அறிவிக்கை வெளியிடப்படும் என முதல் மந்திரி யோகி ஆதித்யாநாத் தெரிவித்தார்.



    இந்த அறிவிப்பின்படி மது வகைகள், சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் வசூலிக்கப்படும் கட்டணங்கள், மாநில அரசின் பொதுத்துறை நிறுவனங்கள் வருமானத்தின் மீதான வரிவிதிப்பு உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    மேலும், பசுக்களின் பராமரிப்புக்காக விவசாய விளைபொருள் விற்பனை கூடங்கள் தற்போது செலுத்திவரும் ஒரு சதவிகிதம் வரியும் இரண்டு சதவிகிதமாக உயர்த்தப்பட்டுள்ளது, குறிப்பிடத்தக்கது.

    அரசின் இந்த முடிவுக்கு அம்மாநிலத்தின் முன்னாள் ஆளும்கட்சிகளான சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

    கோசாலைகளை அமைத்து பசுக்களை பராமரித்து பாதுகாப்பது பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கொள்கையாக இருக்குமானால் இதை மத்திய அரசு நாடு முழுவதும் ஏன் அமல்படுத்தவில்லை? என பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி கேள்வி எழுப்பியுள்ளார்.

    பசுக்களை காப்பாற்ற வேண்டியது அரசின் கடைமைகளில் ஒன்று. இதற்காக தனியாக புதிய வரியை திணித்து மக்களை ஏன் துன்புறுத்த வேண்டும்? என சமாஜ்வாதி கட்சி செய்தி தொடர்பாளர் ராஜேந்திர சவுதரி குறிப்பிட்டுள்ளார். #UPGovt #Gaukalyancess #StrayCattle
    Next Story
    ×