search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மேகாலயா நிலக்கரி சுரங்க விபத்து - வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்க கடற்படை வல்லுநர் குழு
    X

    மேகாலயா நிலக்கரி சுரங்க விபத்து - வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்க கடற்படை வல்லுநர் குழு

    மேகாலயா மாநிலத்தின் நிலக்கரி சுரங்கத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் நீச்சல் வீரர்கள் அடங்கிய வல்லுநர் குழுவை இந்திய கடற்படை இன்று அனுப்பி வைத்துள்ளது. #Meghalayacoalmine #NavyDivers
    ஷில்லாங்:

    வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மேகாலயாவில், கிழக்கு ஜைன்டியா மாவட்டம் லும்தாரி கிராமத்தில் ஒரு நிலக்கரி சுரங்கம் உள்ளது. அந்த சுரங்கம், அனுமதி எதுவும் பெறாமல் சட்டவிரோதமாக இயங்கி வருகிறது. சுரங்கத்தின் அருகில் லிட்டின் என்ற ஆறு ஓடுகிறது.

    சுரங்கத்தில் விபத்து ஏற்படும்போது, உள்ளூர் தொழிலாளர்களாக இருந்தால், உள்ளூர் மக்கள் பிரச்சினை செய்வார்கள் என்று கருதி, இந்த சுரங்க நிர்வாகம் வேறு மாநில தொழிலாளர்களையே பணி அமர்த்துவது வழக்கம். தற்போது, அசாம் மாநிலத்தில் இருந்து வரவழைக்கப்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருவதாக தெரிகிறது.

    தொழிலாளர்கள் சுமார் 350 அடி ஆழத்துக்கு சுரங்கம் தோண்டி உள்ளனர். அடிப்பகுதிக்கு செல்லும் வழியில் கிளைகள் போன்று இருபுறமும் பிரிந்து செல்லும்வகையில் கிடைமட்டமாகவும் சுரங்கம் தோண்டி உள்ளனர். இப்பகுதி ‘எலி பொந்து’ என்று அழைக்கப்படுகிறது.

    கடந்த 13-ம் தேதி, இந்த நிலக்கரி சுரங்கத்துக்குள் தொழிலாளர்கள் பணியில் இருந்தபோது, அருகில் உள்ள லிட்டின் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வெள்ள நீர், சுரங்கத்துக்குள்ளும் புகுந்தது. இதில் சுமார் 15 தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர். அவர்களை மீட்க தேசிய பேரிடர் மீட்பு படையினரும், மாநில பேரிடர் மீட்பு படையினரும், போலீசாரும் களத்தில் இறங்கினர்.

    சுரங்கத்துக்குள் வெள்ள நீர்மட்டம் 70 அடியாக உள்ளது. தேசிய பேரிடர் மீட்புப்படையினர் 30 அடி வரை மட்டுமே நீருக்குள் இறங்க முடியும். எனவே, அந்த அளவுக்கு நீரை வெளியேற்ற முயன்றபோது, குறைந்த சக்தி கொண்ட மோட்டார்களால் தண்ணீரை வேகமாக வெளியேற்ற முடியவில்லை. அத்துடன், மழையும் பெய்ததால் கடந்த திங்கட்கிழமை மீட்புப்பணி நிறுத்தப்பட்டது.

    இதையடுத்து,  நாக்பூர் உள்ளிட்ட நகரங்களில் இருந்து சக்திவாய்ந்த மோட்டார்கள் சாலைமார்க்கமாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இவை சம்பவ இடத்துக்கு வந்து சேர இன்னும் 3 அல்லது 4 நாட்கள் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நேற்றுடன் 15 நாட்கள் ஆனநிலையில், மீட்புப்பணி இன்னும் தாமதம் ஆகும் என்று தெரிகிறது.

    இந்நிலையில், மேகாலயா நிலக்கரி சுரங்கத்தின் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் நீச்சல் வீரர்கள் அடங்கிய வல்லுநர் குழுவை இந்திய கடற்படை இன்று அனுப்பி வைத்துள்ளது. அவர்கள் அங்கு விரைந்து சென்று மீட்பு பணிகளில் ஈடுபட உள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #Meghalayacoalmine #NavyDivers
    Next Story
    ×