search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முத்தலாக் மசோதா தேவையில்லை- மக்களவையில் அதிமுக எம்பி அன்வர் ராஜா கடும் எதிர்ப்பு
    X

    முத்தலாக் மசோதா தேவையில்லை- மக்களவையில் அதிமுக எம்பி அன்வர் ராஜா கடும் எதிர்ப்பு

    முத்தலாக் மசோதா முஸ்லிம் தனிநபர் சட்டத்தில் நேரடியாக தலையிடுவதாகவும், இந்த மசோதா தேவையில்லை என்றும் மக்களவையில் நடந்த விவாதத்தின்போது அதிமுக எம்பி அன்வர் ராஜா கடும் எதிர்ப்பு தெரிவித்தார். #TripleTalaqBill #AnwharRaajhaa
    புதுடெல்லி:

    மக்களவையில் இன்று முத்தலாக் மசோதா மீதான விவாதத்தில் கலந்துகொண்டு அதிமுக எம்பி அன்வர் ராஜா பேசியதாவது:-

    முஸ்லிம் தனிநபர் சட்டத்தில் இந்த முத்தலாக் சட்டம் நேரடியாக தலையிடுகிறது. இந்திய அரசியலமைப்பு அளித்துள்ள அடிப்படை உரிமைகளுக்கு எதிராக இந்த மசோதா உள்ளது. உணர்ச்சிகரமான விஷயத்தில் கண்மூடித்தனமாக மத்திய அரசு செயல்படுகிறது. முத்தலாக் பிரச்சனையில் கணவருக்கு 3 ஆண்டு சிறைதண்டனை விதிப்பது நியாயமற்றது. இஸ்லாமிய ஆண்களுக்கு எதிரான இந்த சட்டத்தை நான் எதிர்க்கிறேன்.

    இந்த மசோதாவை கொண்டு வருவதால் மத்திய அரசு என்ன மாற்றத்தை ஏற்படுத்தப் போகிறது? கண்துடைப்புக்காகவே மத்திய அரசு இந்த மசோதாவை கொண்டு வந்துள்ளது. தற்போதைய வடிவில் இந்த மசோதாவை நிறைவேற்றக்கூடாது. இதில் சில திருத்தங்கள் செய்ய வேண்டும். எனவே, இந்த மசோதாவை பாராளுமன்ற நிலைக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்ப வேண்டும்.


    இந்த முத்தலாக் தடை மசோதா தேவையில்லை. அனைத்துக் கட்சிகளும் ஒருங்கிணைந்து மசோதா நிறைவேறாமல் தடுக்க வேண்டும்.

    இவ்வாறு அன்வர் ராஜா பேசினார். இந்த விவாதத்தில் அன்வர் ராஜா தமிழில் பேசியது குறிப்பிடத்தக்கது.

    முன்னதாக விவாதத்தை தொடங்கி வைத்து பேசிய மத்திய சட்டத்துறை மந்திரி ரவிசங்கர் பிரசாத், 20 இஸ்லாமிய நாடுகளில் முத்தலாக் முறை தடை செய்யப்பட்டுள்ள நிலையில், இந்தியா போன்ற மதச்சார்பற்ற நாடுகளில் ஏன் அதை செய்ய முடியாது? என்று கேள்வி எழுப்பினார். இதை அரசியல் ரீதியாக பார்க்க வேண்டாம் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார். #TripleTalaqBill #AnwharRaajhaa
    Next Story
    ×