search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எம்பிக்களின் அமளியால் மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு
    X

    எம்பிக்களின் அமளியால் மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு

    மேகதாது விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை எழுப்பி எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டதால் மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. #WinterSession #RajyaSabhaAdjourned
    புதுடெல்லி:

    பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் கடந்த 11-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. ரபேல் விவகாரம், மேகதாது அணை விவகாரம் மற்றும் மாநிலம் சார்ந்த கோரிக்கைகளை வலியுறுத்தி எதிர்க்கட்சி எம்பிக்கள் பாராளுமன்ற இரு அவைகளிலும் அமளியில் ஈடுபட்டுவருகின்றனர். இதனால் அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

    இந்த அமளிக்கிடையிலும் சில மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. கடந்த வாரம் திங்கட்கிழமை மக்களவையில் முத்தலாக் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. அதன்பின்னர் வார இறுதி நாட்கள் மற்றும் கிறிஸ்துமஸ் விடுமுறை என தொடர்ந்து 5 நாட்கள் பாராளுமன்றத்திற்கு விடுமுறை விடப்பட்டது. விடுமுறை முடிந்து இன்று காலை மீண்டும் பாராளுமன்றம் கூடியது.

    11 மணிக்கு மக்களவை கூடியதும், ரபேல் விவகாரம் குறித்து பேசுவதற்கு தனக்கு நேரம் ஒதுக்கும்படி மக்களவை காங்கிரஸ் கட்சி தலைவர்  மல்லிகார்ஜுன கார்கே, சபாநாயகர் சுமித்ரா மகாஜனிடம் கேட்டார். ஆனால் இந்த விவகாரம் குறித்து பேசுவதற்கு இது சரியான நேரம் இல்லை என்று கூறிய சபாநாயகர், மதியம் 12 மணிக்கு பிறகு 2 நிமிடம் பேசுவதற்கு அனுமதி அளிப்பதாக கூறினார்.  உடனடியாக அனுமதி அளிக்காததால் காங்கிரஸ் உறுப்பினர்கள் கடும் அதிருப்தி அடைந்தனர். கோஷங்கள் எழுப்பியபடி அமளியில் ஈடுபட்டனர். இதனால் பகல் 12 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது.

    இதேபோல் மாநிலங்களவையில் மேகதாது அணை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக உறுப்பினர்கள் முழக்கங்கள் எழுப்பினர். இதேபோல் மற்ற கட்சிகளின் எம்பிக்களும் தங்கள் மாநிலம் சார்ந்த பிரச்சனைகளை எழுப்பினர். உறுப்பினர்களை அமைதிகாக்கும்படி அவைத்தலைவர் கேட்டுக்கொண்டார். ஆனால் நேரம் செல்லச் செல்ல உறுப்பினர்களின் அமளி அதிகரித்தது. இதையடுத்து நாள் முழுவதும் அவை ஒத்திவைக்கப்பட்டது. #WinterSession #RajyaSabhaAdjourned
    Next Story
    ×