search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளர் சுட்டுக் கொலை
    X

    பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளர் சுட்டுக் கொலை

    பாகிஸ்தான் பாராளுமன்ற முன்னாள் உறுப்பினரும் கடந்த தேர்தலில் இம்ரான் கானை எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளருமான சையத் அலி ராசா அபிடி துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார். #Pakistanlawmaker #SyedAliRazaAbidi #Karachilawmaker
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் நாட்டின் சிந்து மாகாணத்தின் தலைநகரான கராச்சி பகுதியை சேர்ந்தவர் அலி ராசா அபிடி(46). பிரபல தொழிலதிபரான இவர் முத்தாஹிதா குவாமி அமைப்பு கட்சியின் முக்கிய பிரமுகராக அரசியலிலும் ஈடுபட்டு வந்தார்.

    கடந்த 2013-ம் ஆண்டு பாகிஸ்தான் பாராளுமன்றத்துக்கு நடைபெற்ற தேர்தலில் கராச்சிக்கு உட்பட்ட 251-வது தொகுதியில் முத்தாஹிதா குவாமி அமைப்பின் சார்பில் இவர் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

    கடந்த ஜூலை மாதம் 25-ம் தேதி நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் 243-வது தொகுதியில் போட்டியிட்ட அலி ராசா அபிடி, தெஹ்ரிக் இ இன்சாப் கட்சி தலைவர் இம்ரான் கானிடம் தோல்வி அடைந்தார்.


    பின்னர், தனிப்பட்ட காரணங்களுக்காக ராஜினாமா செய்வதாக கூறி கடந்த செப்டம்பர் மாதம் முத்தாஹிதா குவாமி அமைப்பில் இருந்து வெளியேறினார்.

    இந்நிலையில், கராச்சி நகரின் கயாபான் இ காசி பகுதியில் உள்ள தனது வீட்டுக்கு நேற்றிரவு காரில் வந்த இவரை நோக்கி அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் துப்பாக்கிகளால் சுட்டனர். படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அபிடி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    இந்த தாக்குதல் சம்பவத்துக்கு பாகிஸ்தான் அதிபர் ஆரிப் ஆல்வி, பிரதமர் இம்ரான் கான் மற்றும் பல்வேறு கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். #Pakistanlawmaker #SyedAliRazaAbidi #Karachilawmaker
    Next Story
    ×