search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அயோத்தி கோவில் பிரச்சினை தீர்க்கப்படும் வரை பா.ஜ.க.வுடன் கூட்டணி பேச்சுவார்த்தை கிடையாது - சிவசேனா
    X

    அயோத்தி கோவில் பிரச்சினை தீர்க்கப்படும் வரை பா.ஜ.க.வுடன் கூட்டணி பேச்சுவார்த்தை கிடையாது - சிவசேனா

    அயோத்தி கோவில் பிரச்சினை தீர்க்கப்படும் வரை பா.ஜ.க.வுடன் கூட்டணி பேச்சுவார்த்தை கிடையாது என்று சிவசேனா கூறியுள்ளது.

    மும்பை:

    பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.கவுக்கும் சிவசேனாவுக்கும் இடையே கூட்டணி அமையுமா என்பதில் தொடர்ந்து கேள்விக் குறி நீடிக்கிறது.

    சிவசேனாவுடன் நிச்சயம் கூட்டணி உண்டு. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று பா.ஜ.க. தேசியத் தலைவர் அமித் ஷா சமீபத்தில் கூறியிருந்தார்.

    ஆனால் பா.ஜ.க.வுடன் கூட்டணி சேர இதுவரை சிவசேனா சாதகமான பதிலை கூறவில்லை. அதற்கு பதில் பா.ஜ.க.வுக்கு நெருக்கடி கொடுக்கும் புதிய நிபந்தனைகளை சிவசேனா விதித்துள்ளது. இது தொடர்பாக சிவசேனா தலைவர் உத்தவ்தாக்கரே நேற்று பொதுக் கூட்டத்தில் பேசும்போது கூறியதாவது:-

    மராட்டிய மாநிலத்தில் விவசாயிகள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மராட்டியம் முழுவதும் வறட்சி நிலவுகிறது. இந்த சூழ்நிலையில் பாரதிய ஜனதாவுடன் தேர்தல் கூட்டணி பற்றி பேச சிவசேனாவுக்கு விருப்பம் இல்லை.

    அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட வேண்டும். ஆனால் மத்திய அரசு அதை கிடப்பில் போட்டு கும்பகர்ணன் போல தூங்கிக் கொண்டிருக்கிறது. அந்த கும்பகர்ணா தூக்கத்தை கலைக்கவே நான் சமீபத்தில் அயோத்திக்கு சென்று வந்தேன்.

    அயோத்தி ராமர் கோவில் பிரச்சினையை தேர்தலுக்காக மட்டுமே பயன்படுத்துவதை சிவசேனா ஒரு போதும் ஏற்காது. அத்தகையவர்களை நாங்கள் ஒருபோதும் மண்ணிக்க மாட்டோம்.

    அயோத்தி கோவில் விவகாரத்தில் மத்திய அரசு ஒரு தெளிவான நிலையை ஏற்படுத்த வேண்டும். அயோத்தி கோவில் விவகாரத்துக்கு தீர்வு காணப்படும் வரை பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி பேச்சு வார்த்தை கிடையாது. இதில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம்.

    தெலுங்கானாவிலும், மிசோரமிலும் மாநில கட்சிகளே அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளன. மராட்டிய மாநில மக்களும் அப்படி வாக்களித்து சிவசேனா கட்சிக்கு வலிமை சேர்க்க வேண்டும். நிதிஷ் குமாரும், ராம்விலாஸ் பஸ்வானும் அயோத்தி பிரச்சினையில் தங்களது தெளிவான முடிவை வெளியிட வேண்டும்.

    பாரதிய ஜனதா கட்சி பல்வேறு முனைகளில் தோல்வியைத் தழுவி உள்ளது. வெங்காயம் விலை வீழ்ச்சி கண்ணீரை வரவழைக்கிறது. பயிர் விவசாயிகள் கடனில் தத்தளிக்கிறார்கள். எனவே விவசாயிகளை காப்பதையே நாங்கள் லட்சியமாக கொண்டுள்ளோம்.

    ஆட்சியில் நீடிக்க வேண்டும் என்பது எங்களது லட்சியம் அல்ல. அனைத்து பெரிய முக்கிய பிரச்சினைகளை தீர்க்கும் வரை பாரதிய ஜனதாவுடன் சமூக உறவுக்கு வாய்ப்பே இல்லை.

    இவ்வாறு உத்தவ்தாக்கரே கூறினார்.

    Next Story
    ×