search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மேற்கு வங்காளத்தில் ரத யாத்திரைக்கு அனுமதி கோரி சுப்ரீம் கோர்ட்டில் பாஜக முறையீடு
    X

    மேற்கு வங்காளத்தில் ரத யாத்திரைக்கு அனுமதி கோரி சுப்ரீம் கோர்ட்டில் பாஜக முறையீடு

    மேற்கு வங்காளம் மாநிலத்தில் பா.ஜ.க. நடத்தும் ரத யாத்திரைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. #BJP #BJPyatra #AmitShah
    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்துக்காக ‘ஜனநாயகத்தை காப்போம்’ என்ற பெயரில் மேற்கு வங்காளம் மாநிலத்தின் மூன்று மாவட்டங்களில் ரத யாத்திரைகளை நடத்துவதற்கு பா.ஜ.க. தலைவர் அமித்ஷா திட்டமிட்டார். இதில் முதல் யாத்திரை கூச்பெகர் மாவட்டத்தில் கடந்த 7-ம் தேதி தொடங்குவதாக இருந்தது.
     
    ஆனால், இந்த யாத்திரைகளுக்கு அனுமதி அளிக்க மாநில அரசு மறுத்து விட்டது. இந்த முடிவை எதிர்த்து அம்மாநில பா.ஜனதா சார்பில் கொல்கத்தா ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு கடந்த 7-ம் தேதி  விசாரணைக்கு வந்தது.

    அப்போது மாநில அரசு சார்பில் ஆஜரான வக்கீல் கிஷோர் தத்தா, மாநிலத்தில் மதரீதியான மோதல்களும், பதற்றமும் ஏற்படும் என்பதால், இந்த யாத்திரைகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்தார்.  இவ்வழக்கில் தீர்ப்பளித்த கொல்கத்தா ஐகோர்ட், பா.ஜ.க. ரத யாத்திரைக்கு அனுமதி மறுத்த மாநில அரசின் உத்தரவுக்கு தடை விதிக்க மறுத்து விட்டது.



    இதுதொடர்பாக, அன்று டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பா.ஜ.க. தலைவர் அமித் ஷா, மேற்கு வங்காளம் மாநிலத்தில் பா.ஜ.க. நடத்தும் ரத யாத்திரைகளை யாராலும் தடுக்க முடியாது. திட்டமிட்டபடி எல்லா ரத யாத்திரைகளையும் நாங்கள் நடத்தியே தீருவோம் என தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில், மேற்கு வங்காளம் மாநிலத்தில் பா.ஜ.க. நடத்தும் ரத யாத்திரைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்துக்காக பா.ஜ.க. சார்பில் மேற்கு வங்காளம் மாநிலத்தில் உள்ள 42 பாராளுமன்ற தொகுதிகளில் ரத யாத்திரைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதல்கட்டமாக மூன்று மாவட்டங்களில் நடத்தவுள்ள ரத யாத்திரைக்கு அம்மாநில அரசு விதித்துள்ள தடையை நீக்கி, யாத்திரைக்கு அனுமதி அளிக்குமாறு உத்தரவிட வேண்டும் என பா.ஜ.க. வழக்கறிஞர் தாக்கல் செய்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    இந்த விவகாரத்தை அவசர வழக்காக விசாரிக்கவும் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. இம்மனுவின் மீது சுப்ரீம் கோர்ட் விசாரணை நடத்துமா? அல்லது, கொல்கத்தா ஐகோர்ட் முன்னர் அளித்த தீர்ப்பை உறுதிப்படுத்தி, மனுவினை தள்ளுபடி செய்யுமா? என்ற எதிர்பார்ப்பு பா.ஜ.க.வினரிடையே  மேலோங்கியுள்ளது. #BJP #BJPyatra #AmitShah  
    Next Story
    ×