search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராஜீவ் காந்திக்கு அளிக்கப்பட்ட பாரத ரத்னா விருதை பறிக்க பஞ்சாப் சட்டசபை சிறப்பு கூட்டம்?
    X

    ராஜீவ் காந்திக்கு அளிக்கப்பட்ட பாரத ரத்னா விருதை பறிக்க பஞ்சாப் சட்டசபை சிறப்பு கூட்டம்?

    முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் ‘பாரத ரத்னா’ விருதை திரும்பப்பெற தீர்மானம் நிறைவேற்றுவதற்காக பஞ்சாப் மாநில சட்டசபையை அவசரமாக கூட்டுமாறு சிரோன்மணி அகாலி தளம் வலியுறுத்தியுள்ளது. #RajivGandhis #BharatRatna
    சண்டிகர்:

    தமிழ்நாட்டில் 1991-ம் ஆண்டு தேர்தல் பிரசாரம் செய்யவந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, 21-5-1991 அன்று ஸ்ரீபெரும்புதூரில் மனித வெடிகுண்டால் கொல்லப்பட்டார். நாட்டுக்காக தனது உயிரை தியாகம் செய்த ராஜீவ் காந்தியின் மறைவுக்கு பின்னர் அவரை கவரவிக்கும் வகையில் நாட்டின் மிகமிக உயரிய 'பாரத ரத்னா' விருது அவருக்கு கடந்த ஆண்டில் அளிக்கப்பட்டது.
     
    ராஜீவ் காந்தியின் தாயாரும் இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி, கடந்த 31-10-1984 அன்று டெல்லியில் உள்ள தனது வீட்டில் சீக்கிய பாதுகாவலர்களால் துப்பாக்கியால் சுடப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.

    இந்த படுகொலைக்குப்பிறகு சீக்கியர்களுக்கு எதிராக நாடு முழுவதும் வன்முறை வெறியாட்டங்கள் நடந்தன. இதில் 2800 சீக்கியர்கள் பலியாகினர். டெல்லியில் மட்டும் 2100 சீக்கியர்கள் கொடூரமான முறையில் கொல்லப்பட்டனர்.

    டெல்லியில் சுமார் 25 வயது மதிக்கத்தக்க இருவரை உயிருடன் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தில் டெல்லி போலீசார் போதிய ஆதாரங்கள் இல்லை என வழக்கை முன்னர் மூடி விட்டனர். எனினும், சிறப்பு புலனாய்வு படையினர் நடத்திய விசாரணையின் அடிப்படையில் இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது டெல்லி உயர் நீதிமன்றத்தில் மீண்டும் வழக்கு தொடரப்பட்டது.

    இவ்வழக்கில் கடந்த 20-11-2018 அன்று தீர்ப்பளித்த டெல்லி கூடுதல் அமர்வு நீதிபதி அஜய் பான்டே, குற்றவாளி யஷ்பால் சிங் என்பவருக்கு மரண தண்டனையும், அவருக்கு உடந்தையாக இருந்த ஓய்வுபெற்ற போஸ்ட் மாஸ்டர் நரேஷ் ஷெராவத் என்பவருக்கு ஆயுள் தண்டனை விதித்தும் தீர்ப்பளித்தார். இருவருக்கும் தலா 35 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.

    முன்னர் இந்த கலவர வழக்கில் இருந்து நிரபராதி என்று விடுவிக்கப்பட்ட டெல்லி முன்னாள் காங்கிரஸ் தலைவர் சஜ்ஜன் குமாருக்கு சமீபத்தில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

    இந்த வன்முறைகளில் மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்திக்கு தொடர்பு இருந்ததாக ஆம் ஆத்மி கட்சியினர் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர்.

    இந்நிலையில், ராஜீவ் காந்திக்கு கடந்த 1991-ம் ஆண்டில் அளிக்கப்பட்ட 'பாரத ரத்னா’ விருதை திரும்பப்பெற வேண்டும் என டெல்லி சட்டசபையில் நேற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக செய்திகள் வெளியாகின. ஆனால், இந்த தகவலுக்கு டெல்லி துணை முதல் மந்திரி மணிஷ் சிசோடியா மறுப்பு தெரிவித்தார். அப்படி எந்தவொரு தீர்மானமும் சட்டசபையில் நிறைவேற்றப்படவில்லை என அவர் குறிப்பிட்டார்.

    இந்நிலையில், பஞ்சாப் மாநில சட்டசபையில் எதிர்க்கட்சியாக இருக்கும் சிரோன்மணி அகாலி தளம் கட்சியின் தலைவர் சுக்பிர் சிங் பாதல் இவ்விவகாரம் தொடர்பாக இன்று ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

    அந்த அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது:-

    டெல்லி சட்டசபையில் முதலில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றிவிட்டு பின்னர் ‘பல்டி’ அடித்ததன் மூலம் ஆம் ஆத்மி கட்சி மற்றும் டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலின் நிலைப்பாடு என்ன? என்பது தெளிவாக விளங்குகின்றது.

    காங்கிரஸ் தலைமை வற்புறுத்தியதால் டெல்லி சட்டசபையில் முன்வைக்கப்பட்ட தீர்மானத்தை டெல்லி அரசு மறைத்து விட்டது. இந்த பொய்யின் மூலம் காங்கிரஸ் கட்சியுடன் ஆம் ஆத்மி கள்ளத்தொடர்பு வைத்துள்ளது நன்றாக புரிகிறது.

    ராஜீவ் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் பிரமுகர்கள் தூண்டுதலின்படி டெல்லியில் சீக்கியர்கள் இனப்படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் பஞ்சாபில் உள்ள ஆம் ஆத்மி கட்சி தலைவர்களின் நிலைப்பாடு தொடர்பாக அவர்கள் விளக்கம் அளித்தாக வேண்டும். 

    இதற்கிடையில், இதுதொடர்பாக இங்குள்ள சீக்கியர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் ராஜீவ் காந்திக்கு அளிக்கப்பட்ட ‘பாரத ரத்னா’ விருதை திரும்பப்பெறுமாறு சட்டசபையில் தீர்மானம் கொண்டு வரப்படுமா? என்பதை முதல் மந்திரி கேப்டன் அமரிந்தர் சிங் தெளிவுப்படுத்த வேண்டும்.

    இனப்படுகொலை வெறியாட்டத்தில் ஈடுபட்ட யாருக்கும் இதைப்போன்ற நாட்டின் மிக கவுரவத்துக்குரிய விருது பெறும் தகுதி இல்லை என்ற செய்தியை இதன் மூலம் பஞ்சாப் மாநில காங்கிரஸ் பதிவு செய்தாக வேண்டும். இதற்காக சட்டசபையின் சிறப்பு கூட்டத்தை கூட்ட வேண்டும். 

    இந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேறவும், மனிதநேயத்துக்கு எதிரான குற்றங்களுக்கு இந்த சமூகத்தில் இடமில்லை என்பதை  இதன் வாயிலாக உணர்த்தவும் சிரோன்மணி அகாலி தளம் அனைத்து வகையிலும் துணையாக இருக்கும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். #RajivGandhis #BharatRatna
    Next Story
    ×