search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காஷ்மீரில் இன்று நள்ளிரவு முதல் ஜனாதிபதி ஆட்சி பிரகடனம்
    X

    காஷ்மீரில் இன்று நள்ளிரவு முதல் ஜனாதிபதி ஆட்சி பிரகடனம்

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் இன்று நள்ளிரவில் இருந்து ஜனாதிபதி ஆட்சியை பிரகடனப்படுத்தும் உத்தரவில் ராம்நாத் கோவிந்த் கையொப்பமிட்டுள்ளார். #JammuKashmir #RamnathKovind #PresidentRule
    ஜம்மு:

    87 இடங்களை கொண்ட ஜம்மு-காஷ்மீர் மாநில சட்டசபைக்கு கடந்த 2015-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஜம்மு-காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சி 28 இடங்களையும், பா.ஜ.க. 25 இடங்களையும், ஜம்மு-காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி 15 இடங்களையும், காங்கிரஸ் கட்சி 12 இடங்களையும் இதர கட்சிகள் 6 இடங்களையும் பிடித்தன.

    அங்கு ஆட்சி அமைக்க 44 இடங்கள் தேவை என்ற நிலையில் ஜம்மு-காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சி பா.ஜ.க. ஆதரவுடன் கடந்த 1-3-2015 அன்று ஆட்சி அமைத்தது. பி.டி.பி. எனப்படும் ஜம்மு-காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் முப்தி முகம்மது சயீத் முதல் மந்திரியாகவும், பா.ஜ.க. தரப்பில் நிர்மல் சிங் துணை முதல் மந்திரியாகவும் பொறுப்பேற்றனர். 

    முப்தி முகம்மது சயீத் மறைவுக்கு பின்னர் அவரது மகள், மெகபூபா முப்தி தலைமையில் அம்மாநிலத்தில் பிடிபி - பாஜக கூட்டணி ஆட்சி நடந்து வந்தது. ஆளும் கூட்டணி கட்சிகளுக்குள் கருத்து மோதல் இருந்துவந்த நிலையில், காஷ்மீர் மாநில சட்டசபையில் இடம்பெற்றுள்ள பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் அனைவரையும் டெல்லி வரும்படி பா.ஜ.க. தலைவர் அழைப்பு விடுத்தார். 

    இந்த ஆலோசனைக்கு பின்னர் மெகபூபா முப்தி தலைமையிலான கூட்டணி அரசில் இருந்து விலகுவதாக கடந்த ஜூன் மாதம் பா.ஜ.க. அறிவித்தது.



    தேசிய அரசியலில் பெரும் திருப்புமுனையாக கருதப்பட்ட இந்த அறிவிப்புக்கு பின்னர் தனது முதல் மந்திரி பதவியை மெகபூபா முப்தி ராஜினாமா செய்தார். இதைதொடர்ந்து, அங்கு கவர்னர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. சட்டசபையும் கலைக்கப்பட்டது.

    கடந்த ஆறு மாதங்களாக நடைபெற்றுவந்த கவர்னர் ஆட்சி இன்றுடன் முடிவடையும் நிலையில் காஷ்மீர் அரசியல் நிலவரம் தொடர்பாக நேற்று பிரதமர் மோடி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அங்கு ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த மத்திய அரசு பரிந்துரைத்தது.

    இந்த பரிந்துரையை ஏற்று இன்று நள்ளிரவு முதல் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தும் பிரகடனத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று மாலை கையொப்பமிட்டார்.

    எனவே, இன்று நள்ளிரவு முதல் அடுத்த ஆறுமாத காலம்வரை அங்கு ஜனாதிபதி ஆட்சி அமலில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. #JammuKashmir #RamnathKovind #PresidentRule
    Next Story
    ×