search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரதமர் மோடி அடுத்த மாதம் கேரளா செல்கிறார் - பா.ஜனதாவை வலுப்படுத்த திட்டம்
    X

    பிரதமர் மோடி அடுத்த மாதம் கேரளா செல்கிறார் - பா.ஜனதாவை வலுப்படுத்த திட்டம்

    பிரதமர் மோடி அடுத்த மாதம் கேரளா வரும்போது கட்சியை வலுப்படுத்தும் வகையில் நிர்வாகிகளையும், தொண்டர்களையும் சந்தித்து பேச உள்ளதாக அம்மாநில தலைவர் ஸ்ரீதரன் பிள்ளை தெரிவித்தார். #PMModi #BJP
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் பினராயி விஜயன் தலைமையிலான கம்யூனிஸ்டு கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது.

    அங்கு கம்யூனிஸ்டு கட்சிக்கு பலமான போட்டியாக காங்கிரஸ் கட்சி இருக்கிறது. பா.ஜனதா கட்சியும் கேரள அரசியலில் முக்கிய இடம் பிடிக்க திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது. தற்போது பா.ஜனதா கட்சிக்கு ஓ.ராஜகோபால் என்ற ஒரே ஒரு எம்.எல்.ஏ. மட்டும் தான் உள்ளார்.

    அதே சமயம் கேரள உள்ளாட்சி அமைப்புகளில் பா.ஜனதா கணிசமான இடங்களை கைப்பற்றி உள்ளது.

    விரைவில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால் கேரளாவில் அதிக எம்.பி. இடங்களை கைப்பற்றி அந்த மாநிலத்தில் பலமாக கால்ஊன்ற பா.ஜனதா திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது. அந்த கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா பலமுறை கேரளா சென்று கட்சி வளர்ச்சி பற்றி ஆலோசனை வழங்கி உள்ளார்.

    மேலும் தற்போது சபரிமலையில் இளம் பெண்களை சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து ஆளும் கட்சிக்கு எதிராக பா.ஜனதா தொடர் போராட்டம் நடத்தி வருகிறது. அந்த கட்சியின் முன்னாள் மாநில தலைவர் தலைமை செயலகம் முன்பு இந்த கோரிக்கையை வலியுறுத்தி உண்ணாவிரதமும் இருந்து வருகிறார்.

    இந்த நிலையில் பா.ஜனதா மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திருவனந்தபுரத்தில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. மாநில தலைவர் ஸ்ரீதரன் பிள்ளை தலைமை தாங்கினார்.

    இந்த கூட்டத்தில் பேசிய ஸ்ரீதரன் பிள்ளை அடுத்த மாதம் (ஜனவரி) பிரதமர் நரேந்திர மோடி கேரளா வர உள்ள தகவலை தெரிவித்து கட்சி நிர்வாகிகளை உற்சாகப்படுத்தினார்.

    பிரதமர் கேரளா வரும்போது அவர் கட்சி நிர்வாகிகளையும், தொண்டர்களையும் சந்தித்து பேச திட்டமிட்டுள்ளதாகவும், பாராளுமன்ற தேர்தலை சந்திக்க பா.ஜனதா தயாராக வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

    இதனால் பா.ஜனதா தொண்டர்கள் உற்சாகம் அடைந்து உள்ளனர். #PMModi #BJP
    Next Story
    ×