search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரபேல் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டில் தவறான தகவல் - மத்திய அரசுக்கு எதிராக காங்கிரஸ் உரிமை மீறல் நோட்டீஸ்
    X

    ரபேல் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டில் தவறான தகவல் - மத்திய அரசுக்கு எதிராக காங்கிரஸ் உரிமை மீறல் நோட்டீஸ்

    ரபேல் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டில் தவறான தகவல் அளித்ததாக கூறி, மத்திய அரசுக்கு எதிராக நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் காங்கிரஸ் கட்சி உரிமை மீறல் நோட்டீஸ் கொடுத்தது. #RafaleCase #Congress #Parliament
    புதுடெல்லி:

    ரபேல் போர் விமான பேரம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடக்கோரிய மனுக்களை சுப்ரீம் கோர்ட்டு சமீபத்தில் தள்ளுபடி செய்தது. அந்த தீர்ப்பில், ரபேல் விமான விலை விவரம் குறித்த தலைமை கணக்கு தணிக்கை அறிக்கையை நாடாளுமன்ற நிலைக்குழு ஆய்வு செய்ததாக கூறப்பட்டு இருந்தது.

    ஆனால், உண்மையில், அந்த அறிக்கை, நாடாளுமன்ற நிலைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்படவில்லை என்றும், சுப்ரீம் கோர்ட்டுக்கு மத்திய அரசு தவறான தகவலை அளித்திருப்பதாகவும் காங்கிரஸ் குற்றம் சாட்டியது. அதைத்தொடர்ந்து, தீர்ப்பில் திருத்தம் செய்யக்கோரி, சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு மனுதாக்கல் செய்துள்ளது.



    இந்நிலையில், மத்திய அரசுக்கு எதிராக நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் காங்கிரஸ் கட்சி உரிமை மீறல் நோட்டீஸ் கொடுத்துள்ளது.

    மக்களவையில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவும், மாநிலங்களவையில், எதிர்க்கட்சி தலைவர் குலாம் நபி ஆசாத்தும் இந்த நோட்டீசை கொடுத்துள்ளனர்.

    இதுகுறித்து மல்லிகார்ஜூன கார்கே நிருபர்களிடம் கூறியதாவது:-

    மத்திய அரசுக்கு எதிராக, குறிப்பாக மத்திய சட்ட அமைச்சகத்துக்கு எதிராக உரிமை மீறல் நோட்டீஸ் கொடுத்துள்ளேன். ஏனென்றால், சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்துக்கு சட்ட அமைச்சகம்தான் ஒப்புதல் அளித்தது.

    சுப்ரீம் கோர்ட்டுக்கு தவறான தகவலை அளித்து, நாடாளுமன்றத்தையும், மக்களையும் திசை திருப்பியது ஏன் என்று சட்ட அமைச்சகத்திடம் விளக்கம் கேட்கும்வகையில் இந்த நோட்டீசை கொடுத்துள்ளோம்.

    இந்த அரசு மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை. ஆகவே, நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணையை கோரி உள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மாநிலங்களவை நேற்று கூடியபோது, உறுப்பினர்கள் கொடுத்த நோட்டீஸ்களை அவைத்தலைவர் வெங்கையா நாயுடு வாசித்தார். அப்போது, குலாம் நபி ஆசாத், தான் கொடுத்த உரிமை மீறல் நோட்டீஸ் பற்றி தெரிவித்தார்.

    அதற்கு வெங்கையா நாயுடு, இந்த பிரச்சினை சுப்ரீம் கோர்ட்டில் இருப்பதால், எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று கூறினார்.

    இதற்கிடையே, பிரதமர் மோடிக்கு எதிராக உரிமை மீறல் தீர்மானம் கொண்டுவரக்கோரி, காங்கிரஸ் உறுப்பினர் சுனில் ஜாக்கர், மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜனிடம் மனு கொடுத்தார். அம்மனு தனது பரிசீலனையில் இருப்பதாக சுமித்ரா மகாஜன் கூறினார்.

    அதுபோல், ரபேல் விவகாரத்தில் நாடாளுமன்றத்தில் தெரிவித்த பொய்யான குற்றச்சாட்டுகளுக்காக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மீது உரிமை மீறல் தீர்மானம் கொண்டுவரக்கோரி, பா.ஜனதா தரப்பில் அதன் தலைமை கொறடா அனுராக் தாக்குர் உள்ளிட்ட 4 எம்.பி.க்கள் சபாநாயகர் சுமித்ரா மகாஜனிடம் மனு அளித்தனர்.

    இதற்கிடையே, நாடாளுமன்ற கூட்டுக்குழுவை விட சுப்ரீம் கோர்ட்டே உயர்ந்தது என்பதால், ரபேல் விவகாரம் குறித்து கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட முடியாது என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார். #RafaleCase #Congress #Parliament 
    Next Story
    ×