search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதிய முத்தலாக் திருத்த மசோதா பாராளுமன்ற மக்களவையில் தாக்கல்
    X

    புதிய முத்தலாக் திருத்த மசோதா பாராளுமன்ற மக்களவையில் தாக்கல்

    பாராளுமன்ற மக்களவையில் இன்று கடும் அமளிக்கு இடையில் புதிய முத்தலாக் திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. #TripleTalaqBill #TripleTalaq
    புதுடெல்லி:

    பாராளுமன்ற மக்களவை இன்று காலை கூடியதும்  காவிரி விவகாரத்தில் தமிழ்நாட்டுக்கு உரிய நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என அ.தி.மு.க. எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ரபேல் போர் விமான ஊழல் தொடர்பாக விவாதிக்கப்பட வேண்டும் என்று கோரி காங்கிரஸ் மற்றும் தெலுங்கு தேசம் கட்சிகள் அமளியில் குதித்தனர்.

    இதற்கிடையே, முன்னர் மக்களவையால் நிறைவேற்றப்பட்டு, ராஜ்யசபையில் முடங்கிப்போன முத்தலாக் மசோதாவின் புதுவடிவத்தை மத்திய சட்டத்துறை மந்திரி ரவி சங்கர் பிரசாத் இன்று மீண்டும் தாக்கல் செய்தார்.

    முத்தலாக் முறையை மூன்றாண்டுகள்வரை சிறை தண்டனை விதிக்கப்படக்கூடிய குற்றமாக இந்த புதிய மசோதா உருவாக்கப்பட்டுள்ளது.

    இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பேசிய காங்கிரஸ் எம்.பி. சசிதரூர், மக்களின் மதநம்பிக்கை மற்றும் மதம்சார்ந்த பழக்க வழக்கங்கள் தொடர்புடைய விவகாரம் என்பதால் இவற்றை தடை செய்யும் வகையில் இதுபோன்ற மசோதாக்களை தாக்கல் செய்யும் வலிமை இந்த அரசுக்கு இல்லை என்று குறிப்பிட்டார்.

    அரசியலமைப்பு சட்டம் 15 மற்றும் 16 பிரிவுகளை மீறும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த மசோதாவை ஏற்க மாட்டோம் என்றும் அவர் தெரிவித்தார்.

    முத்தலாக் முறையை ஒழிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தியதால்தான் முத்தலாக் தடை சட்டத்தை கொண்டுவர மத்திய அரசு தீர்மானித்ததாக குறிப்பிட்ட ரவி சங்கர் பிரசாத், சிறிய பிரச்சனைகளைகூட காரணமாக காட்டி வாட்ஸ்அப் மூலமாக முஸ்லிம் பெண்களை விவாகரத்து செய்யும் நடைமுறைகளை தண்டனைக்குரிய செயலாக மாற்ற இதுபோன்ற வலிமையான மசோதா அவசியமாக உள்ளது என்றும் கூறினார்.

    இதைதொடர்ந்து, கடும் அமளிக்கு இடையில் குரல் வாக்கெடுப்பு மூலம் இந்த முத்தலாக் மசோதா தாக்கல் செய்யப்பட்டது.


    இதற்கு பின்னரும் பல்வேறு பிரச்சனைகளை மையப்படுத்தி அவையில் கூச்சலும், குழப்பமும் ஏற்பட்டதால் மக்களவையை பகல் 12 மணி வரையிலும், பின்னர் பிற்பகல் 2 மணி வரையிலும் சபாநாயகர் சுமித்ரா மகாஜன் ஒத்திவைத்தார்.

    முன்னர், ராஜ்யசபையில் முத்தலாக் மசோதா முடங்கிப் போனாலும், சில திருத்தங்களுக்கு பின்னர் ஜனாதிபதியின் ஒப்புதலுடன் கடந்த செப்டம்பர் மாதத்தில் இருந்து அவசர சட்டமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது என்பது நினைவிருக்கலாம். #Govtintroduces #TripleTalaqBill #TripleTalaq

    Next Story
    ×