search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    3 மாநில முதல்-மந்திரிகள் தேர்வு: ராகுல்காந்தி புதிய யுக்தி
    X

    3 மாநில முதல்-மந்திரிகள் தேர்வு: ராகுல்காந்தி புதிய யுக்தி

    ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஷ்கர் ஆகிய 3 மாநில முதல்-மந்திரிகளை தேர்வு செய்வதற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி புதிய நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார். #RahulGandhi #congress
    புதுடெல்லி:

    5 மாநில சட்டசபை தேர்தலில் ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஷ்கர் ஆகிய 3 மாநிலங்களில் பா.ஜனதா வசம் இருந்த ஆட்சியை காங்கிரஸ் கைப்பற்றியது.

    இதையடுத்து 3 மாநிலங்களிலும் முதல்-மந்திரிகளை தேர்வு செய்வதற்கான நடவடிக்கைகள் தொடங்கி உள்ளது.

    ராஜஸ்தானில் முதல்- மந்திரி பதவிக்கு முன்னாள் முதல்-மந்திரியும், மூத்த காங்கிரஸ் தலைவருமான அசோக் கெலாட், மாநில காங்கிரஸ் தலைவரும் ராகுல் காந்திக்கு நெருக்கமானவருமான சச்சின் பைலட் ஆகிய இருவரிடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

    இதேபோல் மத்திய பிரதேசத்தில் மாநில காங்கிரஸ் தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான கமல் நாத், மூத்த தலைவர்கள் ஜோதிர் ஆதித்ய சிந்தியா, திக்விஜய்சிங் ஆகியோர் பெயர்கள் அடிபடுகிறது. திக்விஜய்சிங், கமல்நாத்துக்கு ஆதரவு தெரிவித்து உள்ளார். இதனால் கமல்நாத் - ஜோதிர் ஆதித்ய சிந்தியா இடையே போட்டி நிலவுகிறது.

    சத்தீஷ்கர் மாநிலத்தில் பிரபலமான காங்கிரஸ் தலைவர்கள் யாரும் இல்லாததால் எம்.பி.யான தாம்ரத்வாஜ் தேர்தலில் களம் இறக்கப்பட்டார். அவருடன் மாநில காங்கிரஸ் தலைவர் பூபேஷ்பாகேல், மூத்த தலைவர் டி.எஸ்.சிங்தேவ் பெயர்களும் முதல்-மந்திரி பதவிக்கான போட்டியில் உள்ளது.

    நேற்று 3 மாநிலங்களிலும் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் அந்தந்த மாநில தலைநகரங்களில் நடந்தது. இதில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியால் நியமிக்கப்பட்ட மேலிட பார்வையாளர்கள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் முதல்- மந்திரியை ஒருமனதாக தேர்வு செய்ய முடியாததால் புதிய முதல்-மந்திரியை தேர்வு செய்யும் அதிகாரம் ராகுல் காந்திக்கு வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    இதனால் ராகுல்காந்தி இதில் முடிவு எடுத்து முதல்- மந்திரியை அறிவிப்பார். இந்த வி‌ஷயத்தில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் கருத்து ஒருபுறம் இருக்க, மாநில காங்கிரஸ் தொண்டர்கள் கருத்தை கேட்க ராகுல்காந்தி முடிவு செய்துள்ளார்.


    இந்த 3 மாநிலங்களில் 7 லட்சம் காங்கிரஸ் தொண்டர்கள் உள்ளனர். அவர்களிடம் ராகுல்காந்தி ‘செல்போன் ஆப்’ மூலம் கருத்து கேட்கிறார். காங்கிரஸ் கட்சிக்கு ஏற்கனவே ‘சக்தி’ என்ற பெயரில் ‘செல்போன் ஆப்’ செயல்படுகிறது.

    இதன் மூலம் நாடு முழுவதும் காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்கள் ஒருங்கிணைக்கப்பட்டு வருகிறார்கள். இதை ராகுல்காந்தி 3 மாநில முதல்- மந்திரியை தேர்வு செய்வதற்கு பயன்படுத்துகிறார்.

    இந்த ‘ஆப்’க்குள் சென்றதும் முதலில் ராகுல்காந்தி உரை இடம் பெறுகிறது. அவர் முதல்-மந்திரியாக யாரை தேர்வு செய்யலாம் என்று தொண்டர்களிடம் கருத்து கூறுமாறு வேண்டுகோள் விடுத்து பேசுகிறார்.

    யாரை தொண்டர்கள் விரும்புகிறார்களோ அவரது பெயரை ‘டிக்’ செய்தால் போதும். இதில் மெஜாரிட்டி அடிப்படையில் முதல்- மந்திரி தேர்வு செய்யப்படுவார். முடிவை ராகுல் காந்தி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார். இன்று மாலைக்குள் அறிவிப்பு வெளியாகி விரைவில் முதல்-மந்திரிகள் பதவி ஏற்பார்கள் என்று தெரிகிறது.

    இதற்கிடையே மத்திய பிரதேசம், சத்தீஷ்கர் மாநிலங்களில் முதல்- மந்திரி தேர்வில் உடன்பாடு ஏற்பட்டதாகவும், ராஜஸ்தானில் மட்டும் போட்டி நிலவுவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

    அதன்படி மத்தியப்பிரதேசத்தில் கமல்நாத் முதல்- மந்திரியாக தேர்வு செய்யப்படுகிறார். ஜோதிர் ஆதித்ய சிந்தியாவுக்கு துணை முதல்- மந்திரி பதவி வழங்கப்படலாம் என்று முடிவாகி உள்ளதாக கூறப்படுகிறது.

    ராஜஸ்தானில் முதல்- மந்திரியை தேர்வு செய்வது தொடர்பாக நேற்று ஜெய்ப்பூரில் எம்.எல்.ஏ.க்களுடன் 6 மணி நேரம் ஆலோசனை நீடித்தது. இதில் இறுதி முடிவு எட்டப்படாததால் அசோக் கெலாட், சச்சின் பைலட் ஆகியோரை டெல்லி வருமாறு மேலிடம் அழைத்தது. அதை ஏற்று இருவரும் இன்று காலை விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுச் சென்றனர்.

    இருவரும் ராகுல் காந்தியை சந்தித்துப் பேசியதாகவும் இதில் முடிவு எட்டப்பட்டதாகவும் காங்கிரஸ் மேலிட தலைவர்கள் தெரிவித்தனர். #RahulGandhi #congress
    Next Story
    ×