search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மேகதாது விவகாரம்: தமிழக எம்பிக்கள் கடும் அமளி- மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு
    X

    மேகதாது விவகாரம்: தமிழக எம்பிக்கள் கடும் அமளி- மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு

    மேகதாது விவகாரத்தை எழுப்பி தமிழக எம்பிக்கள் தொடர் அமளியில் ஈடுபட்டதால் மாநிலங்களவை இன்று நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. #WinterSession #RSAdjourned
    புதுடெல்லி:

    பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் இரண்டாம் நாளான இன்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பல்வேறு விவகாரங்களை முன்வைத்து அமளியில் ஈடுபட்டனர். மாநிலங்களவை காலை 11 மணிக்கு கூடியதும், அதிமுக உறுப்பினர்கள் மேகதாது விவகாரம் தொடர்பாக ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வந்து விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர். உறுப்பினர்களின் அமளி காரணமாக முதலில் 12 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது.

    12 மணிக்கு அவை கூடியபோது கேள்வி நேரத்தை நடத்தவிடாமல் அதிமுக உறுப்பினர்களின் அமளியில் ஈடுபட்டனர். அவையின் மையப்பகுதிக்கு சென்று முழக்கங்கள் எழுப்பினர். காவிரி டெல்டா விவசாயிகளை பாதுகாக்க வலியுறுத்தி பேனர்களை ஏந்தியிருந்தனர். இதேபோல் திமுக உறுப்பினர்களும் அவையின் மையப்பகுதிக்கு வந்து காவிரி பிரச்சனையை எழுப்பியதால் அவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.

    அமளியில் ஈடுபட்ட உறுப்பினர்களை இருக்கையில் அமரும்படி அவைத்தலைவர் வெங்கையா நாயுடு கேட்டுக்கொண்டார்.  ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வர முடியாது என்று கூறிய அவர், அவசர முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகள் குறித்து விவாதிப்பதற்காக பல்வேறு நோட்டீஸ்கள் வந்திருப்பதாகவும், அனைத்து பிரச்சினைகளும் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும் என்றும் உறுதி அளித்தார். அதனை உறுப்பினர்கள் ஏற்காமல் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து அவை 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

    2 மணிக்கு அவை கூடியபோதும் அதே நிலை நீடித்தது. இதையடுத்து நாள் முழுவதும் அவை ஒத்திவைக்கப்படுவதாக அவைத்தலைவர் வெங்கையா நாயுடு அறிவித்தார்.



    முன்னதாக, அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் எச்.டபுள்யு.புஷ் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. மேலும் பெண்களுக்கான உலக குத்துச்சண்டை போட்டியில் தங்கம் வென்ற மேரி கோமுக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. #WinterSession #RSAdjourned
    Next Story
    ×