search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சத்தீஷ்கரில் பாரதீய ஜனதா ஆட்சியை பறி கொடுத்தது - பா.ஜனதா முதல்வர் ராமன் சிங் ராஜினாமா
    X

    சத்தீஷ்கரில் பாரதீய ஜனதா ஆட்சியை பறி கொடுத்தது - பா.ஜனதா முதல்வர் ராமன் சிங் ராஜினாமா

    15 ஆண்டுகளுக்கு பிறகு சத்தீஷ்காரில் பாரதீய ஜனதா ஆட்சியை பறிகொடுத்தது. அங்கு காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றது. #Chhattisgarh #Congress #BJP
    ராய்ப்பூர்:

    மத்திய பிரதேச மாநிலத்தில் இருந்து சத்தீஷ்கர் மாநிலம், 2000-ம் ஆண்டில் பிரித்து தனி மாநிலம் ஆக்கப்பட்டது. அதன் முதலாவது முதல்-மந்திரியாக அப்போது காங்கிரஸ் கட்சியில் இருந்த அஜித் ஜோகி பதவி வகித்தார்.

    2003-ம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடந்தபோது, பாரதீய ஜனதா கட்சி ஆட்சியை கைப்பற்றியது. ராமன்சிங் முதல்-மந்திரி ஆனார்.

    அடுத்து 2008, 2013 ஆண்டுகளில் நடந்த சட்டசபை தேர்தலிலும் அந்த கட்சியே வெற்றி பெற்றது. ராமன்சிங் தொடர்ந்து 3 முறை முதல்-மந்திரி பதவி வகித்து ‘ஹாட்ரிக்’ சாதனை படைத்தார்.

    ஆனால் 15 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது கடந்த மாதம் 12 மற்றும் 20 தேதிகளில் 2 கட்டமாக நடந்த சட்டசபை தேர்தலிலும் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைக்க பாரதீய ஜனதா கட்சி கடும் முயற்சியில் ஈடுபட்டது.

    ஆனால் காங்கிரஸ் கட்சியோ, ஆட்சியை இந்த முறை கைப்பற்றியே ஆக வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு களம் இறங்கியது.

    இந்த ‘நீயா, நானா?’ மோதல் காங்கிரஸ் கட்சிக்கு சாதகமாக அமைந்துவிட்டது. பாரதீய ஜனதா தோல்வியை தழுவியது.

    அங்குள்ள 90 இடங்களில் காங்கிரஸ் கட்சி 63 இடங்களில் வென்று, மூன்றில் இரு பங்கு பெரும்பான்மை பலம் பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது.

    ஆளுங்கட்சியாக இருந்து பாரதீய ஜனதா கட்சிக்கு 17 இடங்களே கிடைத்துள்ளன. மற்ற கட்சிகளுக்கு 10 இடங்கள் கிடைத்து இருக்கின்றன.

    முதல்-மந்திரி ராமன்சிங் ராஜ்நந்த்கான் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார்.

    இந்நிலையில் சத்தீஷ்கர் பா.ஜனதா முதல்வர் ராமன் சிங் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்துள்ளார்.  மேலும் ராமன் சிங் பேசுகையில், தேர்தலில் வெற்றி பெற்றுள்ள காங்கிரசுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். பா.ஜனதா தோல்விக்கு முழுபொறுப்பேற்கிறேன். கடந்த 15 ஆண்டுகளாக சத்தீஸ்கர் மக்களுக்காக உழைத்ததை என் அதிர்ஷடமாக கருதுகிறேன். வலுவான எதிர்க்கட்சியாக செயல்பட்டு மாநில வளர்ச்சிக்காக பாடுபடுவோம் என்றார்.

    காங்கிரஸ் கட்சியில் இருந்து பிரிந்து வந்து அஜித் ஜோகி தொடங்கிய ஜனதா காங்கிரஸ், இந்த தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. அவர் மட்டுமே வெற்றி பெற்றுள்ளார்.

    சத்தீஷ்கரில் காங்கிரஸ் கட்சி முதல்-மந்திரி வேட்பாளர் யாரையும் அறிவிக்காமல் வெற்றி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×