search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கியது- 45 மசோதாக்கள் வருகின்றன
    X

    பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கியது- 45 மசோதாக்கள் வருகின்றன

    ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. #WinterSession #ParliamentSession
    புதுடெல்லி:

    பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் வழக்கமாக நவம்பர் மாதம் தொடங்குவது வழக்கம். ஆனால் மத்திய பாரதிய ஜனதா கூட்டணி அரசு தொடர்ந்து 2-வது ஆண்டாக இந்த குளிர்கால கூட்டத்தொடரை டிசம்பர் மாதம் தொடங்குகிறது. அவ்வகையில் இன்று குளிர்கால கூட்டத் தொடர் தொடங்கியது.

    இந்த கூட்டத்தொடரை சுமுகமாக நடத்தி முடிப்பதற்காக அனைத்து கட்சிகளின் ஒத்துழைப்பை கோரும் வகையில் மத்திய அரசு நேற்று டெல்லியில் அனைத்துக்கட்சி கூட்டம் நடத்தியது. பிரதமர் மோடி தலைமையில் சுமார் 2 மணி நேரம் நடந்த இந்த கூட்டத்தில் பல்வேறு மத்திய மந்திரிகள், தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகளும் பங்கேற்றனர்.



    இந்த கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி குளிர்கால கூட்டத்தொடரை சுமுகமாக நடத்துவதற்கு அனைத்து கட்சிகளும் குறிப்பாக எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். கட்சிகள் எழுப்பும் தேசநலன் சார்ந்த பிரச்சினைகளை அரசு வரவேற்கும் என்று கூறிய அவர், பாராளுமன்றத்தில் ஆக்கபூர்வமான விவாதம் நடத்துமாறும் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடுத்தார்.

    இதைப்போல மாநிலங்களவையை சுமுகமாக நடத்துவதற்கு ஒத்துழைப்பு கேட்டு அனைத்து கட்சி பிரதிநிதிகளின் கூட்டம் ஒன்றை அவைத்தலைவரும், துணை ஜனாதிபதியுமான வெங்கையா நாயுடுவும் நேற்று கூட்டி இருந்தார்.

    இந்த கூட்டத்தொடரில் ரபேல் போர் விமான ஒப்பந்த ஊழல், அயோத்தி ராமர் கோவில் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை எழுப்பி அரசுக்கு நெருக்கடி கொடுக்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

    இந்த பரபரப்பான சூழ்நிலையில் இன்று காலை 11 மணிக்கு பாராளுமன்றம் கூடியது. தற்போதைய எம்பிக்கள் மற்றும் முன்னாள் எம்பிக்கள் மறைவுக்கு பாராளுமன்ற இரு அவைகளிலும் இரங்கல் தெரிவிக்கப்பட்டு அவை ஒத்திவைக்கப்பட உள்ளது. நாளை முதல் வழக்கம்போல் அலுவல்கள் நடக்கும்.

    அடுத்த மாதம் (ஜனவரி) 8-ந் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டு உள்ள இந்த கூட்டத்தொடரில் பல்வேறு முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. 20 அமர்வுகளாக நடைபெற உள்ள இந்த கூட்டத்தொடரில் 45 மசோதாக்கள் மற்றும் ஒரு நிதி மசோதா விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும் என பாராளுமன்ற விவகாரத்துறை மந்திரி நரேந்திர சிங் டோமர் தெரிவித்துள்ளார். #WinterSession #ParliamentSession

    Next Story
    ×