search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரிசர்வ் வங்கி, சி.பி.ஐ. உள்ளிட்ட அமைப்புகள் மீது நடக்கும் தாக்குதலை தடுக்க வேண்டும் - ராகுல்
    X

    ரிசர்வ் வங்கி, சி.பி.ஐ. உள்ளிட்ட அமைப்புகள் மீது நடக்கும் தாக்குதலை தடுக்க வேண்டும் - ராகுல்

    ரிசர்வ் வங்கி உள்ளிட்ட ஜனநாயக அமைப்புகள் மீது பா.ஜ.க. நடத்தும் தாக்குதலை தடுத்து நிறுத்த வேண்டும் என இன்று எதிர்க்கட்சிகள் ஒருமனதாக தீர்மானித்ததாக ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார். #Oppnparties #assaultonRBI #Rahul
    புதுடெல்லி:

    2014-ம் ஆண்டு நடந்த பாராளுமன்றத் தேர்தலின்போது வரலாறு காணாத அளவுக்கு தோல்வியைத் தழுவிய காங்கிரஸ் கட்சி அடுத்தடுத்து சில முக்கிய மாநிலங்களையும் இழந்தது. இதைத் தொடர்ந்து தனித்துப் போட்டியிட்டு பா.ஜ.க.வை வீழ்த்த இயலாது என்பதை உணர்ந்த காங்கிரஸ் தலைவர்கள் மெகா கூட்டணியை உருவாக்க முடிவு செய்தனர்.

    இந்த நிலையில் மாநிலங்களில் வலுவாக உள்ள பெரும்பாலான கட்சிகள் பா.ஜ.க.வுக்கு எதிராக மாறின. அது மட்டுமின்றி கடந்த தேர்தலில் பா.ஜ.க. கூட்டணியில் முக்கிய அங்கம் வகித்த சில கட்சிகளும் பா.ஜ.க.விடம் இருந்து விலகி காங்கிரசின் தலைமையை ஏற்க முன் வந்துள்ளன. இதன் காரணமாக பா.ஜ.க.வுக்கு எதிராக அனைத்து எதிர்க் கட்சிகளும் ஓரணியில் ஒன்று திரண்டுள்ளன.

    பா.ஜ.க.வை வீழ்த்த எதிர்க் கட்சிகள் அனைத்தையும் ஒரே குடையின் கீழ்கொண்டு வரும் திட்டத்தில் காங்கிரசை விட தெலுங்குதேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடுக்கு  வெற்றி கிடைத்துள்ளது. ஆந்திராவுக்கு சிறப்பு மாநில அந்தஸ்து அளித்து, கூடுதல் நிதி தராததால் கோபம் அடைந்த சந்திரபாபு நாயுடு பா.ஜ.க. கூட்டணியில் இருந்து விலகி, இந்த மெகா கூட்டணியை உருவாக்கி உள்ளார். பா.ஜ.க.வை தோற்கடித்தே தீர வேண்டும் என்ற ஒரே இலக்குடன் அவர் காங்கிரசுடன் கை கோர்த்துள்ளார். 

    இந்நிலையில், தெலுங்கு தேசம், தி.மு.க. திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி, ராஷ்டீரிய ஜனதா தளம், இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, ஆம் ஆத்மி, ஜம்மு-காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி, மதச்சார்பற்ற ஜனதா தளம் உள்ளிட்ட கட்சி தலைவர்கள் பங்கேற்ற எதிர்க்கட்சி தலைவர்கள் ஆலோசனை கூட்டம் இன்று மாலை டெல்லியில் உள்ள பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது.

    இந்த ஆலோசனைக்கு இடையில் ரிசர்வ் வங்கியின் கவர்னர் உர்ஜித் பட்டேல் ராஜினாமா செய்த செய்தியும் வெளியானது.

    எதிர்க்கட்சி தலைவர்கள் ஆலோசனை கூட்டத்துக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி,  ரிசர்வ் வங்கி, சி.பி.ஐ., தேர்தல் கமிஷன் உள்ளிட்ட அமைப்புகள் மீது மத்தியில் ஆளும் பா.ஜ.க. நடத்திவரும் தாக்குதல்களை தடுக்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர்கள் ஒருமனதாக இன்று தீர்மானித்ததாக தெரிவித்தார். 

    இதே கருத்தை வலியுறுத்திய மேற்கு வங்காளம் மாநில முதல் மந்திரி மம்தா பானர்ஜி, உர்ஜித் பட்டேல் ராஜினாமா செய்த செய்தி அதிர்ச்சி அளிப்பதாக குறிப்பிட்டார்.

    இன்று நடைபெற்ற எதிர்க்கட்சி தலைவர்கள் ஆலோசனை கூட்டம் நாளையும் தொடர வேண்டும் என்று விருப்பம் தெரிவித்த மம்தா, பா.ஜ.க. சர்வாதிகாரியாக செயல்படுகிறது. இந்த ஆட்சிக்கு எதிராக மாபெரும் இயக்கம் உருவாக வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர்கள் தீர்மானித்துள்ளனர்.

    ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் பட்டேல் ராஜினாமா செய்தது தொடர்பாக ஜனாதிபதியை சந்தித்து எதிர்க்கட்சிகள் முறையிட வேண்டும் என தெரிவித்தார். #Oppnparties #assaultonRBI #Rahul
    Next Story
    ×